பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்தில் எதிர் வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளையும் வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலங்களில் 75 சதவீதம் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மானாவாரி வேளாண்மை நிலங்களாகும். நாம் உண்ணும் உணவில் சுமார் 40 சதவீதம் மானாவாரி நிலங்களில் விளைவதில் இருந்தே கிடைக்கிறது. இதனால் புஞ்சை விளைந்தால் பஞ்சம் விலகும் என்பது பழமொழியாக இருந்து வருகிறது. நமது பூமி வெப்பமண்டலமாக இருப்பதால் கோடையில் மேல்மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் பின் ஆவியாகி வெளியேறிவிடும். மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதி படலம் அமைத்துவிட்டால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாகிவிடாமல் இப்புழுதி படலம் தடுத்துவிடும்.

கோடை உழவு..

கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால் கிளறிய மண்ணின் பரப்பு அதிகரிக்கிறது. ஆகவே மண்விரைவில் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும். கோடை பருவத்தில் பெய்யும் மழைநீர் மண்ணில் ஈர்க்கப்பட கோடை உழவு அவசியம். கோடை உழவு செய்யாத நிலங்களில் மண்ணில் மழைநீர் இறங்கும் திறன் மணிக்கு 2 செ.மீ அளவில் தான் இருக்கும். ஆனால் கோடை உழவு செய்த நிலங்களில் மண்ணில் மழைநீர் இறங்கும் திறன் 8 செ.மீ வரை இருக்கும். மேலும், கோடை உழவு செய்யாத நிலத்தில் 15 செ.மீ ஆழம் வரை மழைநீர் இறங்க குறைந்தது 50 மி.மீ மழையாவது பெய்யவேண்டும். ஆனால் கோடை உழவு செய்த நிலத்தில் 25 மி.மீ மழை பெய்தாலே போதுமானது.

மண் அரிப்பு தடுப்பு..

உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடும். இவ்வாறு வழிந்தோடும்போது மண் அரிப்பு ஏற்படும். ஆனால், நாம் கோடை உழவினை சரிவிற்கு குறுக்கே செய்யும் பொழுது மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டத்திற்கு வழிபிறக்கிறது. மேலும் நாம் இடும் இயற்கை உரங்கள் பயிருக்கு கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின்பு கோடை காலத்தில் நிலத்தை சட்டிக்கலப்பை கொண்டு சரிவிற்கு குறுக்கே ஆழ உழ வேண்டும். அதாவது 25 செ.மீ முதல் 30 செ.மீ வரை உழவு செய்யவேண்டும். மேலும், உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள களைச்செடிகள் உரமாக்கப்படுவதுடன், பயிரைத்தாக்கும் பூச்சிகளின் கூண்டுப்புழுக்களும் அழிக்கப்படுகிறது.

எனவே பொன்னமராவதி வட்டார விவசாயிகள் எதிர் வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி சிவராணி கேட்டுக்கொண்டுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..