Home செய்திகள் “ஜெயலலிதா இருந்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்குமா?” – டி.டி.வி தினகரன் கேள்வி!

“ஜெயலலிதா இருந்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடந்திருக்குமா?” – டி.டி.வி தினகரன் கேள்வி!

by ஆசிரியர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உயிருடன் இருந்திருந்தால், 13 அப்பாவிகள் மீது துப்பாக்கிச்சூடும் தடியடியும் நடந்திருக்குமா? அவர்  நடக்க விட்டிருப்பாரா? என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி விலக்கு,  செக்காரக்குடி, பேரூரணி, மேலக்கூட்டுடன்காடு,  முடிவைத்தானேந்தல், சேர்வைகாரன்மடம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இடைத்தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர், சுந்தர்ராஜை ஆதரித்து தினகரன் தேர்தல் பரப்புரை செய்தார்.  அப்போது பேசிய அவர், “ஓட்டப்பிடாரம் தொகுதி வீரம் செறிந்தபகுதி. வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் மற்றும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆகியோர் வாழ்ந்த சிறப்பு பெற்ற பூமி. இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி குமரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள்,  ஸ்டெர்லைட் ஆலையின் லாபத்தில் பாதிப் பங்கையா கேட்டனர்? இந்த ஆலையால் சுற்றுபுறச் சூழலுக்கும், நிலத்திற்கும் மாசு ஏற்படுகிறது எனச்சொல்லிதானே, போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் 100வது நாள் போராட்டத்தின் போது, 2 பெண்கள் உட்பட 13 பேர்  குருவியைச் சுடுவதைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டார்களே?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல  அனுமதித்திருப்பார்களா?.  இச்சம்பவத்திற்கு முன்னால், ஆலைக்கு எதிரானப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, கோவில்பட்டியில் நடந்த  நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர், தூத்துக்குடியில் இந்த ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த, கிராம மக்களிடம் ஏன் ஒருநாள் கூடப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்த ஆலையால் பாதிப்பு இல்லை என்றால், இது குறித்து மக்களுக்கு  முழுமையாக விளக்குவதுடன், மக்களின் சந்தேகங்களைக் களைவது அரசின் கடமை அல்லவா?  முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில், மோடியா இல்லை இந்த லேடியா என்று துணிச்சலுடன் கேள்வி கேட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அப்போது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்த போது,  அவரைப்  பார்க்க வராத மோடியுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளார்கள் எடப்பாடியும் பன்னீரும்.  அம்மாவின் மறைவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி விசாரணைக் கமிசன் அமைக்கக் கோரியவர் ஒ.பி.எஸ்.  ஆனால், இதுவரை ஒருமுறை கூட அந்த விசாரணை ஆணையத்தில் அவர் ஆஜராகவில்லை ஏன்?

சட்டப்பேரவையில் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்த இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தர்ராஜனுக்குத் தகுதிநீக்கம்.  ஆனால்,எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸுக்கு துனைமுதல்வர் பதவியா?  அ.தி.மு.க, பிரசாரக் கூட்டங்களில் ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி, அம்மா, தாயே, அக்கா, தங்கச்சி நான் பேசுறதைக் கேளுங்கம்மா, என  பன்னீர்செல்வம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.  தேர்தல் முடிவுக்குப் பிறகும் இப்படித்தான் பேசப் போகிறார். எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ ஆக்கியது அம்மா. முதல்வர் ஆக்கியது சின்னம்மா. 23ம் தேதிக்குப் பிறகு இ.பி.எஸ். ஓ.பி.எஸும் வீட்டுக்குப் போவது நிச்சயம்!.” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!