மீண்டும் சின்ன திரையில் அப்துல் ஹமீது… புதிய கோணத்தில்…

பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது.

இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்தி வாசிப்பாளர், நேர்முக வர்ணணையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நாடக கலைஞர் என, பல்லாண்டுகளாக பணியாற்றினார். அத்துடன், ‘பாட்டுக்கு பாட்டு’ என்பது போன்ற நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் ஹமீதுவின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், கணீரென்ற குரலும், கடல் கடந்துவந்து தமிழக மக்களின் காதுகளில் தேனாக பாய்ந்தது. ஹமீதுவின் குரலை மட்டுமே வானொலி வாயிலாகக் கேட்டு குதூகலம் அடைந்த நேயர்கள், அவர் முகத்தை ஒரு முறையேனும் பார்த்து விட மாட்டோமா என ஏங்கிக் கிடந்த காலமெல்லாம் உண்டு.

ஒரு காலகட்டத்தில், அப்துல் ஹமீதுவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, வீடியோ கேசட் பிளேயர் மற்றும் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளின் வீடியோ கேசட் போன்றவைகளை வாடகைக்கு எடுத்து, அப்துல் ஹமீதையும் அவர் பேசும் தமிழ் அழகையும் ரசித்த நேயர்களும் உண்டு.

இந்நிலையில், தனியார் சேட்டிலைட் சேனல் தமிழில் அறிமுகமான புதிதில், ‘சன் டிவி’யில் ஒளிபரப்பான ‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு’ என்ற வேடிக்கை வினோத இசைநிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்துல் ஹமீது. இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே பிரபலமானார்.

இவருடைய தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் வெண்கலக் குரலுக்காகவே தமிழக தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்துல் ஹமீதுவை போட்டி போட்டுக்கொண்டு அழைத்தன. இதையடுத்து, ‘ராஜ் டிவி’, ‘கலைஞர் டிவி’ என ஒரு ரவுண்ட் வந்ததுடன், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இது தவிர, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறை பிரபலங்களையும் இவரே பேட்டிகளும் கண்டுள்ளார். அத்துடன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘தெனாலி’, மணிரத்தினத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு, இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதற்காக உலக நாடுகள் பலவற்றுக்கும் பறந்தபடியே இருந்ததால், தமிழக தொலைக்காட்சிகளில் அப்துல் ஹமீதுவை பார்க்க முடியவில்லை. இந்நிலையில், ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் இந்த மாதம் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியில் அப்துல் ஹமீது கலந்து கொள்ள இருக்கிறார்.

வழக்கம்போல் தொகுப்பாளராக இல்லாமல், பங்குபெறும் போட்டியாளர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக அப்துல் ஹமீது களம் இறங்குகிறார். ‘சரிகமப’ சீனியர் சீசன் -2 இசை நிகழ்ச்சியின் தூதுவராக, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாருங்கள் அப்துல் ஹமீது அவர்களே… தங்கள் முகத்தைப் பார்க்கவும் வெண்கலக் குரலைக் கேட்கவும் தமிழக நேயர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..