Home செய்திகள் விரதமிருந்து ஜீவசமாதி அடைந்த பெண் துறவியின் உடல் தகனம்..!

விரதமிருந்து ஜீவசமாதி அடைந்த பெண் துறவியின் உடல் தகனம்..!

by ஆசிரியர்

மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்தில் உண்ணா நோன்பு இருந்து வந்த ஜெயின் மத பெண் துறவி, நேற்று (3/05/2019) இரவு முக்தியடைந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் ஹவாரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமத் பிரபாவதி (65). ஜெயின் மதத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2012ம் ஆண்டு குடும்ப வாழ்க்கையை கைவிட்டு துறவறம் பூண்டார். அதன் பிறகு மாதாஜியாக தீட்சை பெற்ற இவர், ஸ்ரீசுப்ரமத் பிரபாவதி மாதாஜி என்று அழைக்கப்பட்டார்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள ஜெயினர் கோயில்களுக்குச் சென்று வழிபட்ட இவர், ஜெயினர்களின் தலைமையிடமான, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் சித்தாமூரில் உள்ள மடத்தில் உணவு, குடிநீர் அருந்தாமல் விரதமிருந்து ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார்.

அதன்படி, சுமார் இரண்டு மாதத்துக்கு முன்பு 2 ஆண் மற்றும் 9 பெண் துறவிகளுடன், ஸ்ரீசுப்ரமத் பிரபாவதி மாதாஜி மேல்சித்தாமூர் ஜெயினர் மடத்துக்கு வந்தார். கடந்த ஒன்றரை மாதமாக ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டு ஜீவ சமாதி அடைவதற்காக காத்திருந்த இவர், கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து உணவு, தண்ணீர் அருந்துவதை கைவிட்டார். அவருடன் வந்த துறவிகள் 11 பேரும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மந்திரங்கள் ஓதி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (3ம் தேதி) இரவு 8.45 மணிக்கு ஸ்ரீசுப்ரமத் பிரபாவதி மாதாஜியின் நாடித் துடிப்பு அடங்கி, முக்தியடைந்தார். இதை, டாக்டர் ஒருவரும் உறுதி செய்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மேல்சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, ஸ்ரீசுப்ரமத் பிரபாவதி மாதாஜியின் இறுதிச் சடங்குகள் இன்று (4ம் தேதி) காலை நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தர்கள் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து, நெய் ஊற்றி வழிபட்டனர். அதன்பின்பு அவரது உடல், ஜெயின் மடத்தின் பின்புறம் உள்ள இடத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, அவரது உடல் மீது சந்தனக் கட்டைகள் மற்றும் மூலிகைகள் வைத்து அடுக்கப்பட்டன. பின்பு நெய் மற்றும் கற்பூரம் ஏற்றி தகனம் செய்யப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!