பொள்ளாச்சி சொகுசு விடுதியில் கூத்தடித்த பெண் உட்பட 163 இளைஞர்கள் கைது..!

பொள்ளாச்சியில் அருகே, கஞ்சா, மாத்திரை மற்றும் மது போதையில் விடிய விடிய ஆட்டம் போட்டு ரகளை செய்த ஒரு பெண் உட்பட 163 இளைஞர்களை, போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு, கோவையில் தங்கி படித்து வரும் கேரள மற்றும் தமிழக மாணவர்கள் சுமார் 160 பேர், பொள்ளாச்சி சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள ‘அக்ரி நெஸ்ட்’ என்ற சொகுசு விடுதியில் நேற்று (3ம் தேதி), உல்லாச விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் மது, அசைவ உணவு போன்றவை இடம் பெற்றுள்ளன.

இதில் கலந்துகொண்ட மாணவர்கள், சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த பைக்குகளில் வந்துள்ளனர். நேரம் செல்லச்செல்ல போதை தலைக்கேறிய அவர்கள் ஆட்டம், பாட்டம் என்று கூத்தடிக்கத் தொடங்கியுள்ளனர். விடிய விடிய இவர்கள் கூச்சலிட்டதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் கூச்சலால் விரக்தியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து ஆனைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், கோவை எஸ்.பி சுஜித்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற எஸ்.பி சுஜித்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு ஆய்வு செய்ததில், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதும், தகராறு நடந்ததும் உறுதியானது. இதையடுத்து, ஒரு பெண் உட்பட மொத்தம் 163 இளைஞர்கள் மற்றும் அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து எஸ்.பி சுஜித்குமார் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்களில் 120க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 40 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானோர் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு எப்படி இந்த போதை வஸ்துகள் கிடைத்தது..? எவ்வளவு நாட்களாக இங்கு வந்து போகின்றனர்..? இதன் பின்னணியில் வேறு ஏதாவது குற்றங்கள் நடக்கிறதா..? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..