தமிழ் கலைகளை காக்க லண்டனில் ‘பூபாள ராகங்கள்’..!

புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடையே தமிழ் கலைகளின் அடையாளம் பேணும் விதமாகவும், பள்ளிக்கூட வளர்ச்சி நிதிக்காகவும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியம் சார்பில், புலம்பெயர்ந்துள்ளவர்களின் வாழ்வில் தமிழ் அடையாளம் பேணும் கலைகளின் உயர்ச்சிக்காக, ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ‘பூபாள ராகங்கள்’ எனும் கலைநிகழ்ச்சி லண்டனில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 27ம் தேதி லண்டன் ஹரோ ஆர்ட்ஸ் சென்டரில், யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் வளர்ச்சி நிதிக்காகவும், தமிழர்களின் கலைகளைப் பேணும் வகையிலும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட ‘பூபாள ராகங்கள் – 10’ கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் செல்வா செல்வராஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இலங்கை கல்வித்துறையின் முன்னாள் கூடுதல் செயலர் உடுவை எஸ்.தில்லைநடராஜா, வடகிழக்கு மாகாண முன்னாள் உதவிக் கல்வி இயக்குனர் வல்வை ந.ஆனந்தராஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முன்னதாக, தமிழர்களின் பாரம்பரிய மங்கல வாத்தியங்களான நாதஸ்வரம் மற்றும் தவில் இசை முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து அகவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் வித்தியாலய கீதம் பாடப்பட்டது.

கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இராசரத்தினம் ரகுநாதன், தலைமையுரை நிகழ்த்தினார். விழாவின் ஒழுங்கமைப்பாளரும், சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான மகாலிங்கம் சுதாகரன் அனைவரையும் வரவேற்று பேசும்போது, “எமது கலைஞர்களுக்கான அரங்காக ‘பூபாள ராகங்கள்’ அமையவேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவை முன்னிட்டு, விழா ஒழுங்கமைப்பாளர் மகாலிங்கம் சுதாகரனால் தொகுக்கப்பட்ட ‘லண்டன் பூபாள ராகங்கள்-10’ எனும் விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திருமதி மாதவி சிவலீலன் மலர் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்கினார். தொடர்ந்து ஆசிரியை ராகினி ராஜகோபாலின் நாட்டியாலயா மாணவிகளின் பங்குபெற்ற வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

‘லண்டன் பூபாள ராகங்கள்-10’ எனும் சிறப்பு மலருக்கு, இங்கிலாந்து மகாராணி, ஆசிய பசிபிக் விவகாரங்களுக்கான இங்கிலாந்து அமைச்சர் மார்க் ஃபீல்ட் மற்றும் கல்வியாளர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடக அதிபர்கள், பிரபல ஊடகவியலாளர்கள் ‘விழா வெற்றியடைய வேண்டும்’ என்று, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ‘ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பெண் கீபோர்ட் கலைஞர்கள்’ என்ற பெருமையை பெற்றுள்ள துஷி – தனு சகோதரிகள் நண்பர்களுடன் இணைந்து வழங்கிய ‘கானமழை’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த ‘பாப்பிசைப் பிதா’ நித்தி கனகரத்தினம், இலங்கையில் இருந்து வந்திருந்த சங்கீத ரத்தினம் என்.ரகுநாதன், கனடாவில் இருந்து வந்திருந்த ‘சூப்பர் சிங்கர்’ புகழ் சரிகா நவநாதன் ஆகியோர் சிறப்பு பாடகர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன், கம்பர்மலை வித்தியாலயத்தின் பழைய மாணவி மஞ்சுளா சத்தியேந்திரன், லண்டன் இளம் பாடகிகள் நவீனா பிரணவரூபன், அபிநயா மதனராஜா, சந்தோஷ் ராஜநாதன், திசாந்தன் குகதாசன், சேயோன் ராஜநாதன் ஆகியோர் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சிகளை, ‘ஆதவன் டிவி’ மற்றும் ‘ஆதவன் நியூஸ்’ நிறுவனத்தின் தலைமை அதிகாரி எஸ்.கே குணா, ஆனந்த ராணி பாலேந்திரா, மகாலிங்கம் சுதாகரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..