ஓட்டப்பிடாரம் இடைதேர்தலுக்கு அதிமுக, பா.ஜ.க மற்றும் மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம்…

திட்டங்களை கொடுப்பவர் எடப்பாடி, அதை தடுப்பவர் ஸ்டாலின் ” : அமைச்சர் காமராஜ் பேச்சு

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் பகுதியில்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் காண ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி தெற்கு  மாவட்ட  அதிமுக  செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசுகையில், “ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மோகன் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி, அம்மா ஆட்சியை அப்படியே வழி நடத்திசெல்கின்றார் முதல்வர் எடப்பாடி அவர்கள். அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் தங்குதடையின்றி மக்களுக்கு சென்றடையும் வகையில் அறிவித்து செயலாற்றி வருகிறார். மேலும் அவர் எளிமையான  முதல்வர் ஆனால் முடிவு எடுப்பதில் வலிமையான முதல்வராக இருக்கிறார். மக்களுக்கு திட்டங்களை கொடுப்பவர் எடப்பாடி யார் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் திட்டங்களை தடுப்பவர் ” என பேசினார்

திமுகவினரும்- டிடிவி தினகரனும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”. – தூத்துக்குடியில்  தமிழிசை குற்றசாட்டு

ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்ய  தமிழக பா.ஜ.க.மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார், அப்போது அவர்  செய்தியாளர்களிடம்  பேசுகையில், தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக – பாஜக கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகியவற்றில் அனைத்திலும் வெற்றி பெறும். எங்களுடைய வெற்றிக் கூட்டணியின் வெற்றிக்காக பாஜக -அதிமுக தொண்டர்கள் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தூத்துக்குடியில் அதிகமாக தங்கி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தனது பரப்புரையில் அதிமுக கூட்டணி பாஜக கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்.

நான் கேட்கிறேன், ஐந்து முறை திமுக தமிழகத்தை ஆட்சி செய்துஇருக்கிறது முக ஸ்டாலின் துணை முதல் அமைச்சராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் தூத்துக்குடி மக்களும் இதே நிலைமையில் தான் இருந்தார்கள். அப்பொழுது இந்த மக்களுக்கு எதுவும் செய்யாத இவர்கள் தற்பொழுது வந்து இதைச் செய்கிறேன், அதை செய்கிறேன் என்று கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள்.  ஆகவே ஸ்டாலின் இங்கு வந்து எதைச் செய்தாலும் அதனை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.

உப்பளத் தொழிலாளர்களை சென்று சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறுகிறார். நாங்கள் உப்பளத் தொழிலாளர்களை அவர்களின் பணி இடத்திற்கே சென்று பார்த்து கோரிக்கைகளை வாங்கி வைத்துள்ளோம். அவர்களின் கோரிக்கைகளை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அது தவிர தூத்துக்குடியில் நடந்த மே தின பேரணியை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் நாட்டின் பிரதமர் மோடியை களவாணி என குறிப்பிட்டிருக்கிறார். உலகம் முழுவதும் நேர்மையான தலைவர் என பெயரெடுத்த பிரதமர் மோடியை, அவர் களவாணி என்று கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் திமுகவினர். ஆகவே மக்களிடத்தில் மு.க. ஸ்டாலின் என்ன சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள். நாங்கள் நேர்மையான அரசியலை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். இடைத்தேர்தல் மற்றும் அனைத்து பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஆகியவற்றில் அனைத்திலும் திமுக வெற்றி பெற்றுவிடும், ஆட்சிக்கு வந்துவிடும் என உளவுத்துறை கூறி இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் கனவிலேயே நடந்து கொண்டிருக்கிறார்.

ஒரு கட்சி சார்ந்த எம்எல்ஏக்கள் அதிருப்தி செயல்பாட்டுக்கு விளக்கம் கேட்டு அவர்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை சபாநாயகர் வழங்கியிருக்கிறார். அது அந்த எம்எல்ஏக்கள் மீதான அதிருப்தியின் விளைவினால் ஒரு கட்சி எடுத்த நிலைபாடு. சூலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் சூலூர் தொகுதியில் வெற்றியை கொடுத்தால் 25நாட்களில் ஆட்சியை மாற்றி காட்டுகிறேன் என கூறி இருக்கிறார். இது ஜனநாயகத்திற்கு ஏற்றதா?.

திமுகவினரும்- டிடிவி தினகரனும் கைகோர்த்துக் கொண்டு தமிழகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்று டிடிவி தினகரன் அணியினரோடு கைகோர்த்துள்ள ஒரு கட்சி சோதனைக்குள்ளாகி இருக்கிறது. அந்த கட்சி சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நிறைய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சிலை கடத்தல் தடுப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவர் நீடிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமும் அரசின் விருப்பமாகவும் இருக்க முடியும் என்றார்.

“மக்களுக்கு இந்த அரசு செய்ய தவறிய விஷயங்களை முன்வைத்து அதை சாடி நாங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம்”- தூத்துக்குடியில் கமல் பேட்டி.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் காந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக   மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமலஹாசன் இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓட்டப்பிடாரம் தொகுதியில்  மக்களுக்கு, அரசு செய்ய தவறிய விஷயங்களை முன்வைத்து அதை சாடி நாங்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அவர்கள் செய்யாததை நாங்கள் எவ்வாறு செய்வோம் என கூறி வாக்கு சேகரிப்போம். இங்கே நிலத்தடி நீர், நீர் ஆதாரங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டும். அதற்கான தீர்வு என்ன என வல்லுனர்களுடன், ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.  இது தீர்க்க முடியாதது அல்ல. தீர்க்க கூடிய பிரச்சினை தான் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..