Home செய்திகள்மாவட்ட செய்திகள் தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி 10ம் வகுப்பில் தேர்ச்சி..!

தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி 10ம் வகுப்பில் தேர்ச்சி..!

by ஆசிரியர்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேர்ச்சி பெற்றுள்ளது, அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு; காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (15). இவர், மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், பொதுத்தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி வருத்தம் அடைந்தார். இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதியிருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்தார்.

தேர்வு முடிவை பார்க்காத சந்தியா இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர், கதறி அழுதனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், மாணவியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மாணவி சந்தியா தேர்வில் தேர்ச்சி பெற்றாரா..? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர். அப்போது சந்தியா, தமிழில்-39, ஆங்கிலத்தில்-35, கணிதத்தில்- 37, அறிவியலில்-45, சமூக அறிவியலில்-35 என மொத்தம் 191 மதிப்பெண் பெற்று, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிந்தது.

தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவரது தோழிகள் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு தேர்வுடன் முடிந்துவிடப்போவதில்லை. மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் கொண்டு, மாணவ – மாணவிகள் விபரீத முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோரும், தோல்வி அடைந்த மற்றும் குறைவான மதிப்பெண் பெற்ற பிள்ளைகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!