“பயங்கரவாதிகள் தமிழகம் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை..!” – ஏ.டி.ஜி.பி. தகவல்..

“தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள், தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை” என்று, கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. வன்னியபெருமாள் கூறினார்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழக கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தமிழக கடல் பகுதி வழியாக தப்பிவிடாமல் இருக்கவும், தமிழகத்தில் புகுந்து விடாமல் இருக்கவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணியில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். 4 கப்பல்களில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி முதல் நாகப்பட்டினம் வரையிலான கடல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, கடலோர பாதுகாப்பு போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடல் பகுதியின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் நேற்று (25ம் தேதி) ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளுக்குச் சென்றார்.

அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது; “மரைன் உளவுத்துறை போலீஸாரின் தகவலால் தற்போது கடத்தல், அந்நியர் ஊடுருவல் தடுக்கப்பட்டு கடல் பாதுகாப்பு பலமாகி உள்ளது. மரைன் போலீஸாரிடம் உள்ள 24 ரோந்து படகுகள் 3.5 கோடி ரூபாயில் பராமரிப்பு செய்யப்பட உள்ளன.

தமிழக கடல் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு 20 மீட்டர் நீளமுள்ள 19 ரோந்து படகுகளை வழங்கவுள்ளது. தமிழக கடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இல்லை. இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் தமிழக கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவவில்லை” என தெரிவித்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…