Home செய்திகள்உலக செய்திகள் “கிரைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு பதிலடியே இலங்கை தாக்குதல்..!” – ருவான் விஜேவர்தனே..

“கிரைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு பதிலடியே இலங்கை தாக்குதல்..!” – ருவான் விஜேவர்தனே..

by ஆசிரியர்

“நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என இலங்கை ராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், 321 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக, இலங்கையில் இன்று (23ம் தேதி) சிறப்பு பாராளுமன்ற அமர்வு கூடியது. இதில் கலந்துகொண்ட ராணுவ அமைச்சர் ருவான் விஜேவர்தனே கூறுகையில், “கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி, நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்களில் பிரென்டன் டர்ரன்ட் என்ற நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில், அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, கடந்த 21ம் தேதி இலங்கையின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 500 பேரில், தற்போது 375 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், வெளிநாட்டினர் 38 பேர் உயிரிழந்துள்ளனர்; 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3 போலீஸாரும் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை சந்தேகத்துடன் பார்ப்பதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டும்” என, அவர் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!