Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “இலங்கை சிறையில் வாடும் மாணவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம்..!” – மீனவர்கள் அறிவிப்பு

“இலங்கை சிறையில் வாடும் மாணவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம்..!” – மீனவர்கள் அறிவிப்பு

by ஆசிரியர்

“இலங்கை சிறையில் வாடும் மாணவர்களை விடுவிக்காவிட்டால், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதில், பிளஸ் 1 மாணவர் ஷியாம் டேனியல் (17), கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர் பாண்டித்துரை (18) ஆகியோரும் அடங்குவர்.

இந்த மாணவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இலங்கை அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, ஏப்ரல் 26ம் தேதி வரை மாணவர்களின் காவலை நீடித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது. இதனால், மாணவர்களின் உறவினர்களும், மீனவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், மாணவர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 12ம் தேதி தங்கச்சிமடத்தில் உள்ள மாணவர் துரைப்பாண்டி வீட்டின் முன்பு, உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் மீன்துறை அதிகாரிகள், “மாணவர்களின் விடுதலை குறித்து ஏப்ரல் 16ம் தேதி நேரில் விளக்கம் அளிக்கிறோம்” என்று உறவினர்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று (16ம் தேதி), மாணவர்களின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருவதாகச் சொன்ன மீன்துறை அதிகாரிகளை எதிர்பார்த்து மாணவர்களின் உறவினர்கள் பலமணி நேரம் தங்கச்சிமடத்தில் காத்திருந்தனர். ஆனால், சொன்னதுபோல் அதிகாரிகள் வரவில்லை. இதனால், காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர் பாண்டித்துரையின் தாய் பானுமதி கூறியதாவது; “95 நாட்களாக சிறையில் வாடும் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற உணவு, குடிநீர் வழங்கி சித்ரவதை செய்கின்றனர். மாணவர்கள் உடல் சோர்ந்து, மன ரீதியாக பாதித்துள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக இன்று (16ம் தேதி) எங்களிடம் பேச்சு நடத்த இருந்த மீன்துறை அதிகாரிகள் வராதது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் 22ம் தேதிக்குள் மாணவர்களை விடுவிக்காவிட்டால், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!