இராமநாதபுரம் முன்னாள் எம்.பி., ரித்தீஷ் உடல் சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம்…

இராமநாதபுரம் முன்னாள் எம்பி., யும், நடிகருமான சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் , இலங்கை கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தார். முகவை குமார் என்றழைக்கப்பட்ட ரித்தீஷ்  கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 2009ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி., ஆனார்.

இதன் பின்னர் திமுகவில் இருந்து விலகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளராக இருந்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக., வேட்பாளர் சதன் பிரபாகர் ஆகியோருக்கு ஆதரவாக சத்திரக்குடி அருகே போகலூரில் ஏப்.13 மதியம் பிரசாரம் செய்து விட்டு வீடு திரும்பினார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருடன் அன்றைய தினம் மதியம் விருந்து சாப்பிட்டார். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிரசாரத்திற்கு தயாரான அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். டாக்டர் சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரால் நல்வாழ்வு அடைந்த அவரது விசுவாசிகள் வற்புறுத்தலை தொடர்ந்து மேலும் இரண்டு தனியார் மருத்துவனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ரித்தீஷ் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோஷன், ஹாரிக் ரோஷன் என்ற மகன்கள், தானவி என்ற மகளும் உள்ளனர்.

ரித்திஷ் உடலுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் எம். மணிகண்டன், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அ.அன்வர் ராஜா எம்.பி.,  அதிமுக., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன், தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளரும் நடிகருமான கார்த்தி,  தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ்,  சினிமா இயக்குநர் மனோபாலா நடிகர்கள் ராதா ரவி, சின்னி ஜெயந்த், போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, புரோட்டோ சூரி, தயாரிப்பாளர் ஐசரி வேல், எல்கேஜி பட நாயகி பிரியா ஆனந்த் உள்ளிட்ட திரையுலகத்தினர், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, ராஜகண்ணப்பன், பொன் முத்துராமலிங்கம், நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக., வேட்பாளர்), நாஞ்சில் சம்பத், திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ., முருகவேல், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ., அபுபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலை 5:45 மணியளவில் இறுதிச் சடங்கு நிறைவடைந்தது. இதன் பிறகு ரித்தீஷ் உடல் அமரர் ஊர்தியில் அவரது சொந்த ஊரான மணக்குடி எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..