மதுரையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ..

இன்று (14.04.2019) திரு. அசுதோஷ் சுக்லா, இ.கா.ப, காவல்துறை இயக்குநர், (தேர்தல்) தமிழ்நாடு அவர்கள், தென்மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் 2 மாநகரங்களில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2019 மற்றும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

10 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள  7 சட்டமன்ற தொகுதிகள் தென்மண்டலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் மொத்தம் 16475 வாக்குசாவடிகள் (PS), 8120 வாக்குப்பதிவு மையங்களில் (PSL) அமைந்துள்ளது. இவற்றில் 1485 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக (Vulnerable PSL) கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 18.04.2019 (வியாழக்கிழமை) அன்று காலை 0700 மணி முதல் இரவு 0800 மணி வரை மதுரை பாராளுமன்ற தொகுதி உள்ளடக்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளான 188 – மேலூர், 189 – மதுரை கிழக்கு, 191 – மதுரை வடக்கு, 192 – மதுரை தெற்கு, 193 – மதுரை மத்திய தொகுதி மற்றும் 194 – மதுரை மேற்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தென்மண்டலத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் காலை 0700 மணி முதல் மாலை 0600 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்தார். தேர்தலின்போது வாக்குப்பதிவு எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையுமின்றி நேர்மையாகவும் அமைதியான முறையிலும் நடைபெற காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் படையினர் தேர்தல் விதிமுறைகளின்படி பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும், கூடுதலாக 45 நிறுமங்கள் மத்திய ஆயுத காவல் படையினர் 10 பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் (PSL) கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 109 சோதனை சாவடிகள் தென்மண்டலத்தில் அமைக்கப்பட்டு மாவட்ட மற்றும் மாநகர எல்லைக்குள் வரும் வாகனங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. 398 பறக்கும் படைகள் (Flying squads) மற்றும் 197 நிலை கண்காணிப்புக்குழு (Static Surveillance Teams) ஏற்படுத்தப்பட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை மற்றும் வாக்காளர்களை கவர பணம், பரிசு மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் (தேர்தல்) அவர்கள் தெரிவித்தார். மேலும் தேவையான அளவு அதிவிரைவுப்படையும் (Striking Forces), 1522 மண்டல குழுக்களும் (Zonal Parties) ஏற்படுத்தப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் காலதாமதமின்றி விரைந்து அவ்விடத்தை அடைவதற்காக கமாண்டோ படை வீரர்கள் மதுரை மாநகரத்தில் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதிவிரைவுப் படைகளை பணியில் அமர்த்தியுள்ள காரணத்தால் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு தேர்தல் சம்மந்தமான பிரச்சனைகளில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இரவு ரோந்து மற்றும் நிலைக்காவல் பாதுகாப்பு (Picketing Places) இடங்கள் அதிகரிக்கப்பட்டு தேர்தல் காலத்தில் தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரத்தில் சித்திரை திருவிழா கொண்டாடப்படும் இடங்களில் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்கள் (PSL) அமைந்துள்ள பகுதிகளில் 300 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சம்மந்தப்பட்ட பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஒவ்வொரு மாநகர மற்றும் மாவட்டங்களிலும் பிரத்யேகமாக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்ய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 83 நபர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் சமயங்களில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு இடையூறாக இருப்பவர்கள் கண்டறியப்பட்டு இதுவரை 3917 நபர்கள் மீது முன்னெச்சரிக்கை சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களை சுமூகமாகவும், நேர்மையாகவும் மற்றும் அமைதியான முறையிலும் நடைபெற தென்மண்டலத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், காவல்துறை இயக்குநர், (தேர்தல்) அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளிடம், தேர்தல் பாதுகாப்பு பணியின்போது காவல் ஆளிநர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் தேர்தல் பணியின்போது அவர்களுக்கு உண்டான பொறுப்புகளையும் எடுத்துக்கூறி காவல் ஆளிநர்கள் ஈடுபாட்டுடனும், பாரபட்சமின்றியும் நேர்மையாகவும் சிறப்பாகவும் பணிபுரிவதை உறுதி செய்ய கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..