இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய விழிப்புணர்வு விழா…

தமிழ்நாடு சமரச மையம் 14-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்ற சமரச  மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பங்கேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி  கயல்விழி பேசியதாவது: அனைத்து மதங்களின் அடிப்படை தத்துவங்களும் அமைதியையே வலியுறுத்துகின்றன. பொதுமக்கள் நீதிமன்ற  வழக்குகளை பயிற்சி பெற்ற சமரசர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் வழியே சட்டப்படி சமரச தீர்வு காண உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய சமரச மையங்கள் துவங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சமரச மைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் நேரிடையாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர்கள் மூலமாகவோ சமரச மையங்களுக்கு கொண்டு  செல்ல அணுகலாம்.

சமரச மையத்தில் வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் நேரடி பேச்சுவார்த்தையில்  ஈடுபடுவதன் மூலம் தீர்வுகள் எளிதாக ஊக்குவிக்கப்படுகிறது. உகந்த தீர்வுகளை எட்டுவதால் வழக்கு மேல்முறையீடு இல்லாமல் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மனித உறவுகள் சமூக நலன் மேம்படுகின்றன. எனவே பொதுமக்கள் இத்தகைய சமரச மையங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி.ஏ.கயல்விழி பேசினார்.

மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பேசியதாவது: தற்போதைய காலகட்டத்தில் நீதிமன்றங்களுக்கு ஏராளமான வழக்குகள் வருகின்றன. தாமதமான நீதியென்பது மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். எனவே, வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக நீதிமன்றங்கள்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் பயிற்சி பெற்ற சமரசர்களின் உதவியோடு நேரடி பேச்சு வார்த்தையின் மூலம் சட்டப்பூர்வ தீர்வு காணும் வகையில் நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சமரச மையங்களில் எளிதாக சட்டப்பூர்வ சமரச தீர்வு கிடைக்கப் பெறுவதன் மூலம் இரு தரப்பு மனுதாரருக்கும் மனநிறைவு கிடைக்கப் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில் நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் தொடர்பான வழக்குகள், பணம் பரிமாற்றம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு அதிகளவு வரப்பெறுகின்றன. இத்தகைய வழக்குகளுக்கு சமரச மையங்களின் மூலம் விரைவாக, சட்டப்பூர்வமாக தீர்வு காணலாம். இத்தகைய சமரச மையங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்  வீரராகவ ராவ் பேசினார்.

முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வழங்கினர். நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தவை முன்னிட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவபிரகாசம், சார்பு நீதிபதிகள் ராமலிங்கம், ப்ரீத்தா, நீதித்துறை நடுவர்கள் இசக்கியப்பன், ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..