Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா..

நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா..

by ஆசிரியர்

பொதிகைத் தமிழ்ச் சங்கம்,தமிழக அரசின் சங்கங்களின் பதிவு சட்டம் 75-,ன் கீழ் பதிவு எண்:99/2016-ல் பதிவு செய்யப்பட்டு மாதந்தோறும் நிகழ்ச்சிகள்,நூல் வெளியீடு, இளைய, கல்லூரி மாணவ மாணவிகளின் கவிதை வாசிப்பு ,மகா கவி பாரதி,பாரதி தாசன் பிறந்த மற்றும் நினைவு நாள்,உலகத் தாய்மொழி தினம்,உலக கவிதை தினம் உட்பட பல நிகழ்ச்சிகளை நெல்லையில் நடத்தி வருகிறது.

குறிப்பாக, படைப்பாளிகளை கண்டெடுக்கவும், கொண்டாடவும், எழுத்தாளர்களை கவுரவிக்கவும் என பல தமிழ் வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, மூன்றாண்டுகளாக கவிதை நூல் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

2019-ஆம் ஆண்டு ஜனவரியில் உலகத் தமிழ் கவிதை நூல் போட்டியினை இச்சங்கம் நடத்தியது.முதல் படைப்பாளிகள்,பெண் கவிஞர்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப் போட்டிக்கு சிங்கப்பூர், பிரான்ஸ்,கனடா,, மும்பை, கர்நாடகம்,, பாண்டிச்சேரி, தமிழ் நாடு என பல பகுதிகளிலிருந்தும் 67-கவிஞர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.

இதில்,பெண் கவிஞர்களுக்கான சிறப்பு போட்டியில் சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் கவிஞர் இன்பா எழுதிய”ஙப்போல் நிமிர்”என்ற நூலும், முதல் படைப்பாளிகளுக்கான போட்டியில் திருநெல்வேலி முனைவர் சந்திரபுஷ்பம் எழுதிய”கோலமிடாப் புள்ளிகள்”என்ற நூலும் தேர்வாகியது.

மேற்படி கவிஞர்களுக்கு பரிசு வழங்குதல்,கவிதை நூல்கள் வெளியிடுதல்,உலகக் கவிதை தின கவிதை வாசித்தல் என்று முப்பெரும் விழா 24.03.2019-ஞாயிறன்று காலையில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.நிர்வாக அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும்,பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் நிறுவனருமான தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கவிஞர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

பாவையர் மலர் ஆசிரியர் ம.வான்மதி பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் பத்தாயிரம் மற்றும் பாராட்டுச் சான்றினை முனைவர் சந்திரபுஷ்பத்திற்கு வழங்கினார்.முனைவர் வேலம்மாள் முத்தையா சென்னை,கோவை ழகரம் பதிப்பக குழுமம் சார்பில் ரூபாய் இருபதாயிரம் மற்றும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் பாராட்டுச் சான்றினை சிங்கப்பூர் கவிஞர் இன்பாவுக்கு வழங்கினார். தொடர்ந்து, கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய இரு கவிதை நூல்கள் வெளியிடப்பட்டது.

பனிக் குடம் உடையும் நேரம் என்ற கவிதை நூலை கவிஞர் பேரா வெளியிட, கவிஞர் இன்பா பெற்றுக்கொண்டார். கலப்பை சுற்றும் நூலாம்படை என்ற நூலை தேசிய நல்லாசிரியர் செல்லப்பா வெளியிட, நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி பெற்றுக்கொண்டார். பரிசு பெற்ற நூல்களை அறிமுகம் செய்து எழுத்தாளர் நாறும்பூநாதன் பேசினார். கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி வாழ்த்துரை வழங்கினார்.

இவர் தன் பேச்சில்”பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் இந்த விழா மேடையில் அதிகம் பெண்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.இதற்காகத்தானே இருபத்தோர் நூற்றாண்டுகளாக காத்திருந்தோம்.என் பாரதியும், பெரியாரும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணத்தானே ஆசைப்பட்டார்கள்”என் பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து,தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் முனைவர் குணசேகரன் விழாப் பேருரை ஆற்றுகையில்”இந்த விழா மேடையில் கவிஞர் பேரா ஆகியோர் மட்டுமே ஆண்கள்.அதுவும் ஒரு ஓரத்தில்… மேடையில் மகளிர் நிறைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

மார்ச் மாதம் என்றில்லாமல் எல்லா மாதங்களிலும் மாதர்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். தாய்மொழியினையும், நம் கலை மற்றும் பண்பாடுகளையும் காப்பவர்களாக நாம் இருப்போம்” எனவும் குறிப்பிட்டார். பரிசு பெற்ற நூலாசிரியர்கள் பலர் ஏற்புரை வழங்கினர். உலகக் கவிதை தின கவிதை வாசித்த மாணவ மாணவிகளுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களை இணை இயக்குநர் முனைவர் குணசேகரன் வழங்கினார். திருவள்ளுவர் கல்லூரியின் நூலகர் முனைவர் பாலச்சந்திரன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை நூலகர் முனைவர் பாலச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தது பாராட்டுக்குரியதாக இருந்தது.

விழாவில், சிங்கப்பூர் கவிஞர் இன்பாவின் உறவினர்கள், சென்னை போட்டித் தேர்வு மைய முதல்வர் ஸ்டெல்லா மதியழகன், பாளையங்கோட்டை சமூக ஆர்வலர் சந்திரபாபு, வழக்கறிஞர் பாரதி முருகன், கதிர் டி.வி.முத்தமிழ்,புகைப்பட ஆர்வலர் தேவி, கவிஞர் சுப்பையா, புதுக்கோட்டை மாவட்டம் கவிஞர் பொன்னையா, சங்கரன்கோவில் கவிஞர்,அம்பை உதயன் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல தமிழ் ஆர்வலர்கள், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் செயல்களில் தமிழ் உணர்வோடு தங்களை இணைத்துப் பயணித்து வரும் முனைவர் வேலம்மாள் முத்தையா, அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சகோதரி சிவ சத்தியவள்ளி, கவிஞர்பாப்பாக்குடி செல்வமணி, கவிஞர் மஞ்சுளா, எழுத்தாளர் நாறும்பூநாதன், தேசிய நல்லாசிரியர் முனைவர் செல்லப்பா, சமூக ஆர்வலர் சந்திரபாபு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மூத்த வழக்கறிஞர் வள்ளிநாயகம், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் பாரதி முருகன், கவிஞர் சுப்பையா, கதிர் டி.வி.முத்தமிழ், முனைவர் சந்திரபுஷ்பம், திருவள்ளுவர் கல்லூரி நூலகர் முனைவர் பாலச்சந்திரன்,ம.சு.பல்கலைக்கழக நூலகர் முனைவர் பாலசுப்பிரமணியன் இவர்களோடு சென்னை பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி. மேலும் இவர்களுடன் ழகரம் பதிப்பக சென்னை கோவை குழுமத்தின் நிறுவனர் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, சிங்கப்பூர் கவிஞர் இன்பா என அனைவருமே… உள்ளத்தால் அழகானவர்கள்…. உணர்வால் ஆராதனைக்குரியவர்கள் என கவிஞர் பேரா பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள் கூற இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!