Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்..

கோவில்பட்டியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்..

by ஆசிரியர்

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள தேவர் திருமண மஹாலில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு,செயலர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, பசும்பொன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, அதனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், நாடார் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஜான்கணேஷ், யு.பி. மெட்ரிக் பள்ளிச் செயலர் ராஜு, வழக்குரைஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ரோட்டரி சாலைப் பாதுகாப்புப் பிரிவு மாவட்டத் தலைவர் முத்துச்செல்வம், நாடார் நடுநிலைப் பள்ளிச் செயலர் கண்ணன், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், மகிழ்வோர் மன்றக் காப்பாளர்கள் வெள்ளைச்சாமி, மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கத் தலைவர் ரவிவர்மா, பொருளாளர் கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். செயற்குழு உறுப்பினர் பாலாஜி வரவேற்றார். செயலர் சரவணன் நன்றி கூறினார். இந்த புத்தக கண்காட்சி மற்றும் திருவிழாவினை காண சிறு குழந்தைகள் ஆர்வமுடன் வந்து புத்தகங்களை வாசித்தது அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.

புத்தகக் கண்காட்சி தினமும் காலை் 10.30 மணி முதல் இரவு 9  மணி வரை நடைபெறும். இக்கண்காட்சி இம்மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், கண்காட்சியில் அறிவியல்,ஆன்மீகம், இலக்கியம், வரலாறு,ஜோதிடம், அரசியல், மருத்துவம்,பொருளாதாரம், விவசாயம், தொழில்நுட்பம், போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!