இராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 17,588 மாணாக்கர்கள் பங்கேற்பு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையமான சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆய்வு  செய்தார். அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான அரசு பொதுத் தேர்வு மார்ச் 29 வரை நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 75 மையங்களில் 252 பள்ளிகளைச் சேர்ந்த 8,366 மாணவர்கள், 8,606 மாணவியர்கள்,  தனித்தேர்வர்கள் 616 தேர்வு  எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 75 தலைமை  ஆசிரியர்கள், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 75 பட்டதாரி ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் 922 ஆசிரியர்கள், சொல்வதை கேட்டு தேர்வெழுத 44 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்க கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு மாவட்ட
ஆட்சியர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக  123 ஆசிரியர்களை கொண்டு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர்  தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர்  மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் தேவையான  போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மாணாக்கர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் நுழையாதவாறு  பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) டி.பிரேம், செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..