கீழக்கரையில் சொத்து வரி,வணிக வரி தீர்வு என்ன?.. உண்ணாவிரதமும், போராட்டமும்தான் தீர்வா?..

தூத்துக்குடி மாவட்டம் தென்காசியில் அநியாய சொத்து வரி உயர்வை எதித்து முழு கடையடைப்பு,உண்ணாவிரதம் போராட்டம் நாளை நடை பெற உள்ள நிலையில் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தால் அநியாயமாக ஏற்றப்பட்ட சொத்து,வணிக வரி விதிப்பிற்கு தீர்வு என்ன? இது சம்பந்தமாக சட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம் நிர்வாகி அஹமது அஸ்லம் கூறுகையில்

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தற்போது வரி சீரமைப்பு என்ற பெயரில் கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட வீடுகள்,வணிக நிறுவனங்களுக்கு பல மடங்கு வரி விதித்து பொதுமக்களையும்,வணிகர்களையும் வாட்டி வதைத்து வருகின்றது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி பகுதியில் இருக்கும் சொத்துகளுக்கு கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக கூடுதல் வரி விதிப்பை விதித்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம்தேதி கீழக்கரை நகராட்சி சார்பாக ஒரு அறிவிப்பு சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.

இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு மட்டுமே இருக்கும் கீழக்கரை நகராட்சி பகுதியை *A B C* என்று மூன்று பிரிவுகளாக பிரித்து இருப்பதாகவும் தற்போது கீழக்கரை நகராட்சி நிர்வாகம் வரி சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் இது சம்பந்தமாக பொதுமக்கள் ஆட்சோபனை இருந்தால் 30 நாட்களுக்குள் ஆட்சோபனை மனு கொடுக்கலாம் என்று அதே பத்திரிகையில் குறிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது.இது சம்பந்தமாக கீழக்கரை நகர் நல இயக்கம்,மக்கள் நல பாதுகாப்புக்கழகம்,மக்கள் டீம்,வடக்குத்தெரு சமூக நல அமைப்பு,இஸ்லாமிய கல்வி சங்கம்,கீழை நியூஸ், நுகர்வோர் உரிமை பாதுகாப்புக்கழகம்,சத்திய பாதை மாத இதழ் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

வரி சீரமைப்பு சம்பந்தமாக சுமார் 592 மனுக்களை நேரிலும்,தபால்மூலமாக பொதுமக்கள் அனுப்பினார்கள். ஆனால் ஆட்சோபனை மனு செய்த ஒரு நபருக்கு கூட எந்த பதிலும் கூறாமல் தன்னிச்சையாக சுமார் 300 மற்றும் 500 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பு செய்ததோடு கீழக்கரை பொதுமக்களிடம் ஆட்டோ விளம்பரம் மற்றும் நாளிதழ்கள் மூலம் மிரட்டும் தோரனையில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அடாவடி வசூலில் ஈடுபட்டு வருகின்றது. அதே போல் தவ்ஹீத் ஜமாத் சார்பாகவும் 200கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது.

வரி சீரமைப்பு சம்பந்தமாக செய்தி தாள் விளம்பரம் படி பொதுமக்களை அழைத்து பேசாமல் ஏதோசதிகாரப்போக்கில் தன்னிச்சையாக வரி விதிப்பை அமுல் படுத்திய கீழக்கரை நகராட்சியை நோக்கி சமூக ஆர்வலர்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகிறார்கள்.மனு அளித்த பொதுமக்களை அழைத்து பேசாமல் கீழக்கரை மக்கள் மீது அநியாயமான சொத்து வரி விதிப்பை அமுல் படுத்திய கீழக்கரை நகராட்சியை எதித்து ஜனநாயக வழி போராட்டம் நடத்த கீழக்கரை மக்கள் முன் வர வேண்டும்.

இதே போல் பிரச்சினைக்கு தேனி பகுதியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டத்திற்கு பிறகே தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..