இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் மேம்படுத்திய வசதி அர்ப்பணிப்பு…

இராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை,  மத்திய சுற்றுலாத்துறையுடன்  இணைந்து பணிகளை மேற்கொண்டது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக வெளி வளாகப் பகுதி அகலப்படுத்தப்பட்டு பயணிகள் எளிதாக ரயில் நிலையத்துக்குள் சென்று வரும் வகையில் முறைப் படுத்தப் பட்டுள்ளது. பயணச்சீட்டு பதிவு அலுவலகத்திற்கு முன்பு பயணிகள் காத்திருக்கும் பகுதி அளவு குறைவாக இருந்ததால் பயணிகள் வசதிக்காக அதுவும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியிலிருந்து நடைமேடைக்கு செல்லும் குறுகலான நுழைவுவாயிலில் பயணிகள் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு அந்த நுழைவாயில் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் ரயில் பயணம் குறித்த விசாரணைகளுக்காக காத்திருப்புப் பகுதியில் புதிய விசாரணை மைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் அலுவலகம் ஒன்று காத்திருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. நடைமேடையில் உணவு மற்றும் சிற்றுண்டி கடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த உணவு கடைகள் நவீன மயமாக்கப்பட்டுள்ளன. காலி தண்ணீர் பாட்டில்களை கையாளுவதற்காக நவீன இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது பயணிகள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் வழங்கிய இரண்டு மின்கலத்தால் இயங்கும் வண்டிகள் உரியவர்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. புதிய நவீன பயணிகளின் உடமைகள் காப்பு  அறையும் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகரத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் வகையில் புகழ்பெற்ற அமர் சித்ர கதா நிறுவனம் வழங்கிய ராமேஸ்வரத்தின் மைந்தர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் ராமாயணத்தின் முக்கிய பகுதிகளின்  இரண்டு ஓவியங்கள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. கும்பகோணம் ஓவியர் ரமேஷ் வரைந்த தஞ்சாவூர் ஓவியப் பாணி ராமாயணக் காட்சி குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று (09.3.2019) துவக்கி வைத்தார்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீனு இட்டியரா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ஓ பி ஷாவ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், கோட்ட வர்த்தக ஆய்வாளர் மணிகண்டன்,
கோட்ட பொறியாளர் பாஸ்கர், கோட்ட துணை பொறியாளர் மனோகரன், மூத்த பகுதி பொறியாளர் கண்ணன், ரயில்வே பாதுகாப்பு படை செக்யூரிட்டி கமாண்டோ முகைதீன், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சவுத்ரி ரயில்வே பாதுகாப்பு படை துணை ஆய்வாளர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..