கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “சர்வதேச மகளிர் தினவிழா ஃபீனிக்ஸ்-2019”

​கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 08.03.2019 அன்று காலை 10.30 மணியளவில் “சர்வதேச மகளிர் தினவிழா ஃபீனிக்ஸ்-2019” மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி சிவில் துறைத்தலைவர் அழகியமீனாள் மற்றும் இராமநாதபுரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர் அழகியமீனாள் பேசுகையில் “பெண்கள் தமது முன்னேற்றத்திற்காகவும் வளமான வாழ்விற்காகவும் பாடுபட வேண்டும். பெண்களின் முழுமையான முன்னேற்றமே அந்த நாட்டின் முன்னேற்றமாக கருதப்படுகிறது. சமூகம் மற்றும் குடும்பச் சூழல் ஆகிய இரண்டும் பெண்களின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன. சங்ககால இலக்கியம் தொட்டு நவீன கால இலக்கியம் வரை பெண்களின் பெருமையினை போற்றுகின்றன. திருவள்ளுவர், புரட்சிக் கவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் உட்பட பலர் பெண்மையின் சிறப்பினைப் போற்றி பாடியுள்ளனர். அதுமட்டுமின்றி, இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி அளப்பரியது. விண்வெளி ஓடத்தில் சென்று தன்னுயிர் துறந்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த கல்பனா சாவ்லா மனவலிமைக்கு உதாரணமாக இன்றும் பேசப்படுகிறார். தொழு நோயாளிகளின் வேதனையைத் தாய்மையுள்ளத்துடன் அணுகி அவர்களின் துயர் துடைத்த அன்னை தெரசா அவர்கள் பெண்கள் குலத்துக்கே பெருமை சேர்த்த மாதராக போற்றப்படுகிறார். பெண்களின் முன்னேற்றமானது தான் பயிலும் கல்வியின் அடிப்படையிலேயே கிடைக்கப்பெறுகிறது. ஆகவே மாணவியர் தாங்கள் பயிலும் துறைகளில் சிறந்தவர்களாக திகழ்ந்து வாழ்வில் முன்னேற்றம் பெறவேண்டும் ” என வலியுறுத்தினார்.

இவ்விழாவில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முகம்மது ஜஹபர், முதல்வர் அப்பாஸ் முகைதீன் மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர் பவானி ராஜேந்திரன் பேசுகையில் “நமது சமூக அமைப்பில் சாதி கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமை முழுவதுமாக நீக்கப்பட வேண்டும். பெண்களுக்கு குடும்ப சுமைகள் பொறுப்புகள் பல இருந்தாலும் அதையும் தாண்டி தங்களின் முன்னேற்றதற்காக அயராது பாடுபட வேண்டும். பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை திறனுடன் கையாண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். மாணவிகளாகிய நீங்கள் தங்களுக்கென கொள்கை, இலட்சியம், மனவலிமை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சமூக சிந்தனையுடன் கூடிய திறமையான பெண்களாக ஆண்களுக்கு நிகராக ஆளுமை தன்மையுடன் முன்னேற வேண்டும். சீரும் சிறப்புமான இந்தியாவின் வளர்ச்சிக்கு திறமையான பெண்கள் தாங்கள் பயின்ற கல்வியினை துணையாகக் கொண்டு தொழில் நுட்பத்திலும் அறிவியல் வளர்ச்சியிலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் மேலோங்கி திகழ வேண்டும்” என வலியுறுத்தினார். முன்னதாக முதுகலை இரண்டாமாண்டு வணிகவியல் கணினி பயன்பாடு மாணவி து.ஜோசஸ்பின் ஹெலன் ராணி மற்றும் இளங்கலை ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவி அஸ்மத் பாத்திமா ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட முதுகலை இரண்டாமாண்டு கணிதவியல் மாணவி சத்தியபிரியா “மிஸ் பீனிக்ஸ் 19” விருதை வென்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு சிறப்;பித்தனர். இறுதியாக இளங்கலை மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவி செல்வி மு. சோபியா மெர்லின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளங்கலை கணினி பயன்பாடு துறைத் தலைவர் திருமதி.ஆ.மதீனா, முதுகலை கணினி பயன்பாடு மற்றும் தகவல் தொழில் நுட்பம் துறை உதவி பேராசிரியர் திருமதி. ளஹாஜிரா பேகம், முதுகலை வணிகவியல் கணினி பயன்பாடு துறை உதவி பேராசிரியர் யமுனா ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுப் செயலர் சர்மிளா, மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..