ஊனத்தை அரசியல் நையாண்டி செய்த பிரதமர் மோடி- TARATDAC மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்டனம்..

நேற்றைய முன்தினம் (மார்-2) ரூர்கேலாவில் உள்ள மத்திய அரசின் இந்திய தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐஐடி) சார்பில் நடைபெற்ற “ஸ்மார்ட் இந்திய ஹக்கத்தான்-Smart India Hackathon 2019” நிகழ்ச்சியையொட்டி, அந்நிறுவன மாணவர்களுடன் காட்சிவழி ஊடகம் வழியாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

டிக்ஸ்லெக்ஷியா என்ற மன நல குறைபாடு பாதித்த மாற்றுத்திறனாளிகள் சம்பந்தமாக தமது நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் ஆய்வுப்படிப்பு குறித்து அப்போது திக்ஷா ஹரியால் என்ற மாணவி பிரதமரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். மாணவி திக்ஷா ஹரியால் பேசிக்கொண்டிருந்தபோதே, இடைமறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அப்படின்னா அது 40,50 வயதுள்ளவர்களுக்கும் பயன்படும்தானே” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் கேலி செய்தார்.

மேலும் “அவரின் அம்மாவும் மகிழ்ச்சியாக இருப்பார் அல்லவா” என சோனியா காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் மோடி கேலி செய்தார்.

மாற்றுத் திறனாளிகளையும் டிக்ஸ்லெக்ஷியா பாதித்தவர்களையும் குறித்து மாணவி திக்ஷா ஹரியால் பேசியபோது, அதனை கனிவோடு கவனித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆய்வை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை இழிவுபடுத்தி, அரசியல் நையாண்டியை அரசு நிகழ்ச்சியில் அப்பட்டமாக நாட்டின் பிரதமர் செய்துள்ளார்.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளை அரசியல் நையாண்டிக்கு பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த செயலுக்கு நரேந்திர மோடி மாற்றுத் திறனாளிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என எமது சங்கம் கோருகிறது.

இல்லையெனில், ஊனத்தன்மையை உள்நோக்கோடு பொதுவெளியில் கேலி செய்த குற்றத்திற்காக நரேந்திர மோடி மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப் பிரிவு 92(a)படி வழக்குகளை பதிவு செய்வோம் எனவும் எமது சங்கம் எச்சரிக்கிறது.

மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தியுள்ள பிரதமர் மோடியின் நையாண்டியைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் கண்டனக்குரல்கள் எழுப்பிடவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்திடவும் TARATDAC சார்பில் பா.ஜான்ஸிராணி, எஸ். நம்புராஜன், மாநில தலைவர், பொதுச்செயலாளர். ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது சென்னையிலும், வாரணாசியிலும் பேசிய மோடி, அப்போதைய மன்மோகன்சிங் அரசை கேலி செய்யும் விதத்தில், அது ஒரு நொண்டி அரசு, செவிட்டு அரசு, குருட்டு அரசு என்றெல்லாம் பேசியதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.

பின்னர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக சட்ட ரீதியாக எதையும் செய்யாமல், அவர்களை ஏமாற்றும் வகையில், ஊனமுற்றோர் என்ற பெயரை அதிகாரபூர்வமாக தெய்வப்பிறவிகள் என தனது ஆட்சியில் பெயர் மாற்றம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்தக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..