தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் முயற்சியை பா. ஜ . க அரசு கைவிட வேண்டும்….

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை.

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்வியிலும்,சேவையிலும் மாநலங்களின் உரிமைகளை முழுமையாக பறித்து விடும். எனவே,தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை. இது தொடர்பாக இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர், டாக்டர். ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறுகையில்

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவையில் மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல் படுவது கண்டனத்திற்குரியது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கை பெற்றிட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு இது வரை பெற்றுத் தராதது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் நீட் தேர்வையும் ,எக்ஸிட் தேர்வையும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு ,அதற்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவருவது சரியல்ல. தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்வியிலும்,சேவையிலும் மாநலங்களின் உரிமைகளை முழுமையாக பறித்து விடும்.எனவே,தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

அரசு மருத்துவர்களுக்கு முது நிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அனைத்து மருத்துவ டிப்ளமோ படிப்புகளையும் முதுநிலை மருத்துவப் படிப்பாக மாற்றுவது வரவேற்கத்தக்கது.

ஏற்கனவே டிப்ளமோ படிப்பை முடிந்தவர்களுக்கும் ஓராண்டு பயிற்சி வழங்கி தேர்வு நடத்தி முதுநிலை பட்டம் வழங்கப்படும் வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதி முறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

பொது சுகாதாரத்துறையை ஒழித்துக் கட்டும் நோக்குடனும்,இலவச மருத்துவ சேவையை ஒழிக்கும் நோக்குடனும் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்திருப்பது கண்டிக்கத்தக்கது. சுகாதாரம் மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பொழுது ,மத்திய அரசே நேரடியாக மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப் படுத்துவது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும்.

நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் துணை சுகாதார நிலையங்களையும், சுகாதார மற்றும் நல மையங்களாக (Health and wellness centre) பெயர் மாற்றி தனியாரிடம் மத்திய அரசு கொடுப்பது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பொது சுகாதாரத்துறையை மத்திய மாநில அரசுகள் வேண்டும். நலவாழ்வு அடிப்படை உரிமையாக மாற்றப்படும் எனக் கூறிய மோடி அரசு , அதிலிருந்து பின்வாங்கியது கண்டிக்கத்தக்கது.

மருந்துகளை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது குழந்தைகள் நலன்களுக்கு எதிரானது என்று கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடன் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் மற்றும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை. தலைவர் டாக்டர் த.அறம், டாக்டர் .ஏ.ஆர்.சாந்தி , AIPF மாநில செயலாளர்கள் இளசை எஸ்.எஸ்.கணேசன், டாக்டர். சத்தியபாலன், AIPF துணைத் தலைவர் ஆர். பாலச்சத்திரன், பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச் சங்க தேசிய தலைவர் பி.காளிதாஸ், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத் தலைவர் கைலாச மூர்த்தி, வீ .நவனீதன், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..