மத்தியிலும், மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்கின்றனர் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என நாகலாபுரத்தில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நாகலாபுரத்தில் புதூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சட்டப் பேரவை உறுப்பினருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். புதூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  பின்னர் அவர் பேசும்போது,  ஒரு கிராமம் தான் நாட்டின் இதயம். கிராமத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். அதனால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நாங்கள் கிராமம் தோறும் சென்று கிராம மக்களை சந்தித்து வருகிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர் . விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அப்போது மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்த மாணவி பவித்ரா பேசும் போது, திமுக ஆட்சியில் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. அப்போது நாங்கள்100 ரூபாய் கொடுத்து கேபிள் டிவி  பார்த்தோம். ஆனால், தற்போது 1000 ரூபாய் கேட்கின்றனர். செட்டாப் பாக்ஸ் இருந்தும் இணைப்பு வழங்கவில்லை என்றார்.
தொலைக்காட்சி பெட்டி எனது தாத்தா கலைஞர் வழங்கினார் . செட் டாப் பாக்ஸ் எனது தந்தை ஸ்டாலின் வழங்குவார் என உதயநிதி பதிலளித்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..