Home செய்திகள் “பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை”… நம்மையும் கிராமத்து தலைவனாக எண்ண வைக்கும் வலிமை..

“பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை”… நம்மையும் கிராமத்து தலைவனாக எண்ண வைக்கும் வலிமை..

by ஆசிரியர்

கடந்த வாரம் காந்த கவிதை குரலின் சொந்தக்காரர் நாகாவின் “ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கவிதைகள்” புத்தகத்தின் கண்ணோட்டம் பார்த்தோம்.  இந்த வாரம் “பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை” என்ற கவிதை தொகுப்பில் கொஞ்சம் பயணித்து பார்ப்போம். 

“பெருங்கூட்டத்தில் தொலைந்தவனின் தனிமை” இந்த புத்தகத்தை படித்து மூடி வைக்கும் பொழுது நம் மூதாதையரையும்,  நம் கலாச்சாரத்தையும், சொந்தத்தையும், பந்தத்தையும் தொலைத்த தனிமையை நம்மால் உணர முடியும் … ஆனால் ஒரு கிராமத்தில் தலைவனாக சுற்றி வந்த ஒரு எண்ணமும் மேலோங்கும் என்பதில் இப்புத்தகத்தை படித்த யாராலும் மறுக்க முடியாது. சமீபத்தில் திரைக்கு வந்த 96 திரைப்படம் பள்ளி கூட வாழ்கையின் ஆழத்தை புரிய வைத்தது என்றால் இப்புத்தகம் நாம் பிறந்து சுவாசித்த மண்ணின் மகிமையை புரிய வைக்கிறது.

இந்த புத்தகம் ஒரு கிராமத்தை சுற்றி வரும் கவிதை தொகுப்பாக இருந்தாலும், நவீனத்தால் நாம் இழந்து கொண்டிருக்கும், சமுதாயத்தை பாதித்து கொண்டிருக்கும் விசயங்களை நறுக்கென்று கொட்டியருப்பது முத்தாய்ப்பு. உதாரணமாக கடன் அட்டையின் (Credit Card) பாதிப்பை “குளிரூட்டப்பட்ட துணிக்கடைக்குள் இப்பொழுதெல்லாம் கடன் அட்டைகளுடன் பயணிக்க முடிகிறது என்னால்… ஆனால் பார்க்கத்தான் முடிவதில்லை கோவிந்தசாமிகளை..” என பொட்டனிக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஜவுளி வியாபாரிகளை குறிப்பிடுவது சிந்திக்க வைக்கிறது. மோர்காரிகளின் வீழ்ந்து விட்ட தொழிலை குறிப்பிடும் “பாக்கெட் தயிரும், யோகர்டுமாக விற்பனையாகும் கடைகளில் பார்க்க முடிவதில்லை  ஓட்டாஞ்சில்லுகள்..”.

இப்புத்தகம் கிராமத்தின் ஒவ்வொரு அற்புதங்களையும், சிறப்புகளையும், படைப்புகளையும் பெற்ற தாயின் பெருமையில் தொடங்கி ஊரின் கடற்கரையில் வந்து அற்புதமாக கலக்கிறது.  இப்புத்தகத்தில் கூறப்படும் ஒவ்வொரு சம்பவத்திற்கும், பாத்திரங்களுக்களையும்  முத்தாய்ப்பபான வரிகளுடன் முடித்திருப்பது கூடுதல் சிறப்பு. 

பஞ்சர் ஒட்டும் சைக்கிள் கடைக்காரரை குறிப்பிடும் “கிழிந்த வாழ்க்கையில்… கிழியாத ஞாபங்களுடன்…”.  போட்டோகிராபர் எனும் ஸ்டூடியோக்காரர் தம்பியை குறிப்பிடும் “போக்கஸ் லைட்டில் மங்கலாக வருகிறது ஞாபகம்…”. கிராமத்து பூச்சாண்டிகளையும் கர்வப்படுத்தும் “ஏதோ ஒரு கர்வம் நெம்பித்தள்ள.. துச்சமாய் வீடுகளின் மேல் பார்வையை துப்பிச் செல்வர்..” எனும் வரிகள்.  பெண்களுக்கு ஜாக்கெட் தைக்கும் தையல்காரருக்கு “ஜன்னல் வைக்கவும் கற்று கொண்டதாக கேள்வி..” என பல இடங்களை குறிப்பிடலாம்.

இக்கவிதை தொகுப்பு கிராமத்து  மனிதர்களை பற்றி மட்டும் பேசவில்லை. கிராமத்து விளையாட்டு ஆடு-புலி ஆட்டம், மக்களோடு கலந்து வாழும் கிளி, பூனை, திருவிழாக்கள், திண்பண்டங்கள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என மொத்த கிராமத்து வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டி விடுகிறது.

இப்புத்தகத்தை படித்து முடிக்கும் பொழுது நெடுங்காலத்திற்கு பிறகு அழகிய கிராமத்தை சுற்றி வந்த அழகிய உணர்வை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!