இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 3 ஆயிரம் பேர் கைது..

கடந்த 2003 ஏப்.7 ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறை பணியாளர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி , பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நூலகர்கள், கல்வித்துறை துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதிய சிறப்பாசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆயிரம் பள்ளிகள் மூடும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். 3,500 துவக்கப்பள்ளிகளை உயர், மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ( ஜாக்டோ-ஜியோ) பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

நிர்வாகிகளை அழைத்து பேசி எவ்வித முடிவையும் அறிவிக்க தமிழக அரசு முன்வராததால் காலவரையற்ற போராட்டம் அறிவித்தனர். மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை விலக்கி கொண்டு பணிக்கு வர வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு எச்சரிக்கையை மீறி ஜன.22 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், பரமக்குடி , ராமேஸ்வரம், கீழக்கரை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை தாலுகா அலுவலகங்கள் முன் ஜன., 22, 23 தேதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களில் 2,200க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தை விலக்கி கொண்டு அரசு ஊழியர்கள் அனைவரும் ஜன., 25 க்குள் பணி திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து 3 வது நாளான இன்று மாவட்டத்தில் உள்ள 36 துறைகளில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image