அலீ அக்பர் என்ற ஒரு நண்பரை மட்டுமா இழந்திருக்கின்றேன்…நட்பின் ஆதங்கம்…..

ஒரு மார்க்க அறிஞரை..
ஓடித்திரிந்த அழைப்பாளரை..
இயக்கத் துடிப்புமிக்க ஆளுமையை..
களம் நிறைந்த செயல் மறவரை..
இதயத்திற்கினிய நண்பரையல்லவா
இழந்து விட்டோம்…!

2010 ஜனவரி 30,31 இரு நாள்கள் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாட்டின் இரண்டாம் நாள் காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் ஹதீஸ் விரிவுரை நிகழ்த்தினார் மெளலவி அலீ அக்பர் மஸ்லஹி. என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. விரிவுரை முடிந்ததும் கட்டித் தழுவினேன். அதுதான் எங்களது முதல் சந்திப்பு. 2019 ஜனவரி 15 ஜமாஅத் அலுவலகத்தில் சந்தித்துப் பேசியது இறுதி சந்திப்பு. 16 ஆம் நாள் அலீ அக்பர் மஸ்லஹி விடைபெற்றுவிட்டார்.

9 ஆண்டுகாலமும் இடையறாது தொடர்ந்த உறவு. கடையநல்லூர் பகுதி பொறுப்பாளராக மெளலவி அலீ அக்பர் இருந்தபோது நெருக்கம் இன்னும் கூடியது. மாதம் தோறும் மண்டலப் பொறுப்பாளர்கள் நிகழ்விற்கு வரும்போது நிறைய நேரம் பேசும் வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய அறைக்கு வந்து தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வார். அடுத்த முறை வரும்போது திருப்பித் தந்துவிட்டு புதிய நூல்களை வாங்கிச் செல்வார். நல்ல வாசிப்பாளர்.

சமரசம் பரப்புரைக்காக நாகர்கோவில் சென்றபோது பேருந்து நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார். இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை, எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்களைச் சந்திக்க வந்தார். சூரியன் மறைவதைப் பார்க்க விரும்பியபோது கன்னியாகுமரி அழைத்துச் சென்றார். எப்போதும் மனம் திறந்து உரிமையோடு பேசுவார். அன்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

ரமளான் இறுதிப் பத்துநாள்கள் நாகர்கோவிலில் நடந்த இரவு உரைகளுக்கு முதுகெலும்பாக நின்று செயல்பட்டவர் மெளலவி அலீ அக்பர். என்னுடைய உரையைக் குறித்து அருமையான விமர்சனம் செய்து குறைகளைக் சுட்டிக்காட்டி நிறைகளை மனம் திறந்து கோடிட்டுக் காட்டி ‘அன்னிக்கு பேசுனமாதிரியே அந்தச் சம்பவத்த அதே தொனில பேசணும்’என்ற அன்புக் கட்டளையோடு அழைத்து பேசச் சொன்னார். இரவு நெடுநேரம் ஆசாரி பள்ளம் பள்ளிவாசலில் பேசிக்கொண்டிருந்தோம். எப்போதும் அவருடன் பேசத் தொடங்கினால் கலகலப்பு அதிகமாகும். நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.

கோவை உறுப்பினர் மாநாட்டின்போது கண்ணீர்பொங்க உணர்வுப் பூர்வமாய் உரை நிகழ்த்தினார். ஜமாஅத்தின் எந்த முகாமாக இருந்தாலும் என்னைத் தேடி வந்துவிடுவார். அன்றும் அப்படித்தான். நிறைய நேரம் பேசினோம். அண்மையில் நடந்த ஐந்து நாள் முகாமில் இன்னும் நெருக்கமானோம். கடையநல்லூர் குறித்து அவருக்கு எப்போதும் கவலை அதிகம். அந்தக் கவலையை வெளிப்படுத்த அவருக்குத் தெரிந்த மொழி கோபம்தான். ஆனால் அந்தக் கோபத்திற்குப் பின்னாலான கவலையை கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார்.

‘ஜமாஅத்த எப்படியாவது தென் தமிழகத்தில் சேர்த்திடணும் அமீனு( அமீன் என்பதை அமீனு என்றுதான் உச்சரிப்பார்). நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், திருமங்கலம் சேர்த்து ஒரு மாநாடு நடத்திட வேண்டும்’என்பதை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.

மெளலவி அலீ அக்பர் மஸ்லஹியின் மறைவு என்பது என் நண்பனின் மறைவு மட்டுமல்ல. ஒரு மார்க்க அறிஞரின் மறைவு. வளர்ந்து வரும் ஒரு கல்லூரியின் நம்பிக்கையைச் சுமந்து நின்ற ஒரு முதல்வரின் மறைவு. உடல் நலம் பாராமல் தமிழகம் முழுவதும் ஓயாது ஓடித்திரிந்த ஓர் அழைப்பாளனின் மறைவு. இகாமத்தே தீன் எனும் உயரிய இலட்சியத்திற்காகப் பாடுபடும் இலட்சியக் கூட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு தலைவரின் மறைவு.

இகாமத்தே தீன் எனும் உயரிய இலட்சியத்தை விளங்கி, அதற்காகப் பாடுபட ஆயிரக்கணக்கான ஆளுமைகள் தேவைப்படுகின்ற ஒரு பெரும் காலகட்டத்தில் அலீ அக்பரின் இழப்பு என்பதை எளிதாகக் கடக்க முடியவில்லை. நாகர்கோவில் பஸல், அமீர், டாக்டர் அப்துல்லா, விருதுநகர் நாஸர், ஹூஸைன்,கோவை இம்தாதி எல்லாரும் என்னைக் கட்டிப்பிடித்து அழுதபோது அவர்கள் வடித்த கண்ணீர் பெருந்துளிகளைத் தோள்களில் சுமந்து நிற்கின்றேன்.

கண்ணீர் பொங்க ‘அமீன் அலீ அக்பர் அவ்வளவுதானா..?’ என்று தேம்பலுடன் கேட்ட மெளல்வி இஸ்மாயீல் இம்தாதி அவர்களே… ‘அலீ அக்பர் முடிந்துவிடவில்லை. அவர் உருவாக்கிய என்னைப் போன்ற தோழர்கள் ஏராளம் இருக்கின்றோம். ஸதகத்துஜ் ஜாரியாவாக அவர் கணக்கில் நன்மைகளை குவித்துக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ்…’

யா அல்லாஹ்…! அலீ அக்பர் என்ற ஒரு செயல் மறவனை நீ அழைத்துக் கொண்டாய்…! அவருடைய பிழைகளை மன்னித்து சுவனத்தின் உயரிய பதவியை வழங்குவாயாக…! கண்ணீர் பொங்கும் ஆற்றாமையால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழமைகளுக்கும் அழகிய பொறுமையை வழங்குவாயாக..!

-வி.எஸ்.முஹம்மத் அமீன்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..