Home செய்திகள் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டார்…

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டார்…

by ஆசிரியர்

ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக ஹிந்து என்.ராம் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு ஊடகவியலாளர் அமைப்புகளும் ஊடக நிறுவனர்களும் ஊடக நிறுவனங்களும் செய்தியாளர்களும் இணைந்து உருவாக்கிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராமை கூட்டணியின் தலைவராக நியமித்தது.

ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அரசுகளும் ஆதிக்கச் சக்திகளும் செயல்பட்டபோது அவற்றை வெற்றிகரமாக முறியடித்த என்.ராமின் பணியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி பாராட்டுகிறது.

ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் 16 பேர் பங்கேற்ற ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் கூட்டம் திங்கள் கிழமை (ஜனவரி 7, 2019) நடைபெற்றது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 124வது பிரிவின் கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது என்று தீர்ப்பளித்த சென்னைக் குற்றவியல் நடுவர் மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வரவேற்று வாழ்த்துகிறது.

கடந்த ஏழு மாதங்களாக அமைப்பின்றி செயல்பட்டு வந்த ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியை அமைப்பாக்குவதற்கான தீர்மானம் ஒன்றையும் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி ஒருமனதாக நிறைவேற்றியது.

ஊடக சுதந்திரத்தைப் பேணுவதையும் கடைசி பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் முதன்மையான நோக்கங்களாக கொண்ட ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி தனது சாசனத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றியது.

இந்திய அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள பேச்சு சுதந்திரத்தைப் பேணுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தச் சாசனத்தின் அடிநாதம் என அதன் அறிவிப்பில் கூறியுள்ளது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!