அரசு அலுவலர்கள் சோதனையில் சிக்கிய பதிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள்…

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன 1 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இது தொடர்பாக பொது மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளிடம் கடந்த 6 மாதங்களாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. ஜனவரி.1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கான தடை அமலுக்கு வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், ஓட்டல்களில் உள்ளாட்சி, வருவாய், காவல் , உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் அதிரடி சோதனையை துவக்கினர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவு படி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் 37 கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு பணியை தீவிரப்படுத்தினர். சிறப்பாக செயல்படும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஜன.26 குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்படுவர் எனவும் அறிவித்தார். இதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட முதுனான், சூரன் கோட்டை, அச்சுந்தன்வயல் ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமான் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதுனாள் -இசிஆர் பகுதியில் உள்ள ஓட்டல் பின்புறமுள்ள குடோனில் பதுக்கிய 600 கிலோ தண்ணீர் பாக்கெட் மூடை கணக்கில் பறிமுதல் செய்தனர். அச்சுந்தன் வயல் பகுதியில் உள்ள ஒரு கடையில் ரகசிய அறையில் பதுக்கிய 50 கிலோ புகையிலை போதை பொருட்கள், பாலித்தின் பைகளை பறிமுதல் செய்தனர்.

கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அலுவலர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் சேவுகபெருமாள் கூறுகையில், தமிழக அரசாணை படி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவு படி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன் வழிகாட்டுதல் பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு ஆய்வு பணியை துவக்கி உள்ளோம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை தொடரும், என்றார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..