அரசு அவமானப்படுத்திவிட்டது; டிச.4 முதல் வேலை நிறுத்தம்: டிச.7-ல் மறியல்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..

பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல் அரசு அவமானப்படுத்தியதால் திட்டமிட்டபடி டிச.4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ – ஜியோ அறிவித்தது. இதையடுத்து, அதன் நிர்வாகிகளை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள், அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிட்டபடி டிச.4 அன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

170 சங்கங்கள் பங்கேற்கும் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடந்தது. கூட்ட முடிவில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “7 மணி நேரம் அமைச்சரிடம் கோரிக்கைகளைச் சொன்னோம். ஆனால் அமைச்சரின் பதில் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது. அவர் உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டுசென்று ஆலோசனை செய்கிறேன் என்று சொல்லவில்லை. அவர் சொன்னது நீங்கள் சொன்னதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். அவ்வளவுதான். நீங்கள் எழுந்து போகலாம் என்று சொன்னார்.

இது 10 லட்சம் அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை அவமதிக்கும் அநாகரிக செயலாக நாங்கள் பார்க்கிறோம். இது எங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆவேசத்தை அதிகப்படுத்தியுள்ளது.  எங்களை அலட்சியப்படுத்திய எங்கள் கோரிக்கைகளை இம்மியளவும் எடுத்துக்கொள்ளாத, எங்களது 7 அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திட்டமிட்டபடி டிச.4–ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர், அரசு ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும்.

வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் தொடர் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். டிச.4 வட்டாரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளான டிசம்பர் 5-ம் தேதி அன்று அவரது படத்தை வைத்து அவருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். நீங்கள் அறிவித்த திட்டத்தை உங்கள் பிள்ளைகள் நிறைவேற்ற மறுக்கிறார்கள். நீங்கள் ஆவியாக அதை நிறைவேற்ற அவர்களுக்கு புத்தி சொல்லுங்கள் என்று கோரிக்கை வைப்போம்.

டிச.6 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். அதற்குப் பின்னரும் இந்த அரசு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களை அழைத்துப் பேசவில்லை என்றால் டிச.7 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் மறியல் செய்வோம்.

இன்னும் கால அவகாசம் உள்ளது. 4-ம் தேதி தான் எங்கள் போராட்டம் தொடங்குகிறது. முதல்வர் எங்களை அழைத்துப் பேசி போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படிச் செய்தால் எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வோம். புயல் பாதித்த பகுதிகளிலும் வேலை நிறுத்தம் நடைபெறும். அப்படி நடந்தாலும் அங்குள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பார்கள்’’. இவ்வாறு மாயவன் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட நிலையில் போராட்டம் தேவையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாயவன், ”பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளில் தேவையான அளவுக்கு பணியாற்றுவோம். எங்களது ஒருநாள் ஊதியத்தை அளித்துள்ளோம். இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் கண்டிப்பாக ஈடுபடுவோம்’’ என மாயவன் தெரிவித்தார்.

நன்றி – தி இந்து தமிழ்.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..