
தமிழக பாஜக மகளிரணி மாநில செயலாளராக மகாலட்சுமி உள்ளார். இவர் மதுரை தெப்பக்குளம் அருகிலுள்ள பங்கஜம் காலணி திருமால் நகரில், வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி நகர் போலீஸ் கமிஷனர் தேவாசீர்வாதத்திடம் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரை சோதனை செய்தனர். கார் அருகில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெட்ரோல் குண்டு, செருப்பு ஆகியவற்றை கைப்பற்றி, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மகாலட்சுமி கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை விரைவாக விசாரணை செய்து கைது செய்ய வேண்டும், என்று பாஜக முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .