“உங்களது ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது”-நடிகர் ரஜினிக்கு பால் முகவர்கள் சங்கம் பகிரங்க கடிதம்…

உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”.

ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்ததான முகாம், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தி ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட தனது ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு “கபாலி” திரைப்படம் வெளியான போதும், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் “காலா” திரைப்படம் வெளியான போதும் மேற்கண்ட கோரிக்கைகளை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்சம் பரிசீலிக்க கூட அவர்கள் வரவில்லை.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள “2.O” திரைப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருப்பதால் எங்களது சங்கத்தின் கோரிக்கையை 3வது முறையாக மீண்டும் கடந்த 19.11.2018 அன்று நடிகர் திரு. ரஜினிகாந்த் மற்றும் “அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற” நிர்வாகி திரு. வி.எம்.சுதாகர் ஆகியோருக்கு பதிவு தபால் வாயிலாக ஒப்புகை சீட்டுடன் அனுப்பியிருந்தோம். அந்த பதிவு தபாலினை கடந்த 22.11.2018அன்று இருவர் தரப்பிலும் பெறப்பட்டதற்கான ஆதாரமாக ஒப்புகைச் சீட்டு எங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நாங்கள் 3வது முறையாக மீண்டும் அனுப்பிய கோரிக்கையை பெற்று சுமார் ஒரு வாரகாலம் ஆன பின்னரும் இன்றைய தேதி வரை அவர் வாய் திறக்காதது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் புதியதாக அரசியல் கட்சி துவங்கி புரட்சி செய்ய போவதாக கூறும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பல்வேறு விசயங்களில் வாய் மூடி மெளனம் காப்பது போல உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட கண்டிப்பான உத்தரவை இட வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை வழக்கம் போல் மெளனமாக கடந்து புறக்கணித்து செல்வதை பார்க்கையில் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாத, தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த எண்ணாத நடிகர் “ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களை இனிமேல் அந்த ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது” என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குறைந்தபட்சம் தனது ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட வைக்க முன் வராத இவர் தமிழக அரசியலில் நுழைந்து மாற்றத்தை கொண்டு வருவேன் என்பது அவரது ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி தனது திரைப்படங்களை ஓட வைத்து அதன் மூலம் கோடிகளை குவிக்கும் யுக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மேலும் முன்னணி கன்னட நடிகரான திரு.அம்பரீஷ் அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்  டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆறுதல் கூற நேரில் செல்ல மனமில்லாமல் இருக்கும் இவர் தமிழக மக்களுக்கு நன்மையை செய்வார் என நம்ப வைப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.

இணைப்பு:- 19.11.2018அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் ஆகியோருக்கு அனுப்பிய பதிவு தபால்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..