Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பால் அருந்தாத டாக்டர் வெர்கீஸ் குரியன் – வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)..நவம்பர்,26.. தேசிய பால் தினம்.

பால் அருந்தாத டாக்டர் வெர்கீஸ் குரியன் – வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)..நவம்பர்,26.. தேசிய பால் தினம்.

by ஆசிரியர்

இந்தியாவில் டாக்டர் வெர்கீஸ் குரியன் அவர்கள் வெண்மை புரட்சியின் தந்தை என்று அறியப்படுவது நாம் அறிந்ததே.  இந்த புகழுக்குப் பின்னால் குரியன் அவர்களின் விசாலமான கனவும், கனவை மெய்ப்படுத்தும் திட்ட வரைவுகளும், அதை செயல்படுத்த தேவையான கடுமையான உழைப்பும் விடா முயற்சியும் உள்ள என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

பிறப்பும், இளமைக் கால கல்வியும்:-

டாக்டர் குரியன் அவர்கள் 1921ஆம் ஆண்டு நவம்பர்26ம் நாளன்று கேரள மாநிலத்தில் கள்ளிக்கோட்டை என்னும் இடத்தில் பிறந்தார்.  இவரின் தந்தை ஒரு மருத்துவர்.  தாயார் கற்றறிந்த சிறியன் கிறித்துவர்.  டாக்டர் குரியன் அவர்கள் பள்ளிக் கல்வியை தொடர்ந்து 1940ஆம் ஆண்டு சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.  பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் (இயந்திரவியல்) பட்டப்படிப்பை முடித்தார்.

டாக்டர் குரியன் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் என்னும் இடத்தில் அமையப்பெற்ற டாட்டா இரும்பு தொழில் நிறுவனத்திலும், கர்நாடகத்திலுள்ள பெங்களுருவில் அமைந்திருந்த தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்திலும் சிறிது காலம் பயிற்சி பெற்றார்.  பின்னர்இந்திய அரசின் கல்வி உதவித் தொகைப் பெற்று அமெரிக்காவிலுள்ள மெச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பினை பொறியியல் (இயந்திரவியல்) துறையில் கற்றார்.

வெண்மை புரட்சியின் (White Revolution) அடித்தளம்

அமெரிக்காவில் இருந்து தாய்திரு நாடு திரும்பிய டாக்டர்குரியன் அவர்கள் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் எனும் இடத்தில் அமையப்பெற்ற பால்மாவு உற்பத்தி தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டார்.  அங்கு அவரின் தலையாய கடமை என்னவென்றால் பம்பாய் மாகாண மக்களுக்கு தேவையான பாலை தங்கு தடையில்லாமல் விநியோகம் செய்வதே ஆகும்.  அந்த சமயத்தில் டாக்டர்குரியன் அவர்களுக்கு கிராமப் புறங்களில் வசிக்கும் பால் உற்பத்தியாளர்கள் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் ஏற்பட்டது.  அதன் விளைவாக அவர் எண்ணத்தில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை மேம்பட ஏதுவான திட்ட வரைவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.

அந்த சூழ்நிலையில் தான் குஜராத்திலுள்ள கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கும் போல்சான் என்னும் தனியார் பால் நிறுவனத்திற்கும் சந்தையை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வந்தது.  இந்த சவாலை புரிந்துக் கொண்ட டாக்டர் குரியன் அவர்கள் அதை வாய்ப்பாக நினைத்து தான் பணிபுரிந்து வந்த அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர்சங்கத்தின் தலைவராக இருந்த திரு. திருபுவன்தாஸ் பாட்டீல் அவர்களை சந்தித்து உதவிகரம் நீட்டினார்.  அச்சங்கத்தில் குரியன் அவர்கள் மேலாளராக பணியமர்த்தப்பட்டார்.  அந்த காலகட்டத்தில் குரியன் அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளோடு நிர்வாக அலுவலக பணிகளையும் திறம்பட புரிந்தார்.  அதன் விளைவாக பம்பாய் மாகாணத்திற்கு பதப்படுத்தப்பட்ட பாலை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைபம்பாய் மாகாண அரசிடம் இருந்து வெற்றிகரமாக பெற்று தந்தார்.  இதன் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் புதிய பால் உற்பத்தியாளர்கள் தங்களை கூட்டுறவு சங்கத்தில் இணைத்துக் கொண்டனர்.  இதனால் கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கம் வலுப்பெற்று விரிவடைந்தது.

இவ்வாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை திறம்பட முன்னெடுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும்போதே அமைதியாக வேறொரு சாதனையும்குரியன் அவர்களின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.  அது என்னவென்றால் உலகிலேயே முதன்முறையாக எருமை பாலிலிருந்து பால்மாவு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபடைத்ததாகும்.  அதுவரை பால்மாவானது பசும்பாலில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இங்கு குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் பாதிக்கும் மேல் எருமை மாட்டிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்தது.  அவ்வாறு கிடைக்கப்பெற்ற திரவ பால் குளிரூட்டப்பட்டு ஒரு சில நாட்களிலேயே நகரங்களில் விநியோகிக்கபட வேண்டும் என்னும் கட்டாயம் நிலவி வந்தது. இதனால் திரவ பாலை சேமித்து வைப்பதிலும், சேமித்து வைத்தலுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் அந்த கால கட்டத்தில் இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் எருமைப் பாலில் இருந்து பால் மாவு தயாரிக்கும் தொழில்நுட்பமானது கண்டுபடைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.  இதன் விளைவாக தேவைக்கு அதிகமான திரவ பாலானது பால்மாவாக மதிப்புக் கூட்டப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது.  இவ்வாறு மதிப்புக் கூட்டிய பால் பொருட்கள் அதிக லாபத்தை ஈட்டியதோடு மட்டுமல்லாமல் பால் உற்பத்தியாளர்களிடையே அதிக பால் உற்பத்தி செய்வதற்கு ஓர் உந்து சக்தியாகவும் விளங்கியது.  இவ்வாறாக டாக்டர் குரியன் அவர்கள் கிராமப்புற மக்களுக்கு பால் உற்பத்தி மூலம் நிரந்தர சீரான வருமானம் கிடைப்பதற்கு ஒரு முக்கிய காரணியாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

அமுல்இந்தியாவின் சுவை (AMUL – The Taste of India)

டாக்டர் குரியன் அவர்கள் பால் உற்பத்தியை பெருக்குவதில் காட்டிய முனைப்பைவிட உற்பத்தி செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வதில் பெரும் பங்காற்றினார் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.  எனவே தான் டாக்டர் குரியன் அவர்கள் விற்பனை செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களுக்கு சந்தையில் ஒரு விற்பனை பெயர் அவசியம் என்று கருதினார்.  ஒரு விற்பனை பொருளின் விற்பனைப்பெயர் (Brand Name)மூலமே அந்த பொருளானது மக்களின் மனதில் நிலைத்துநிற்கிறது என்று நம்பினார். அது மட்டுமல்லாமல் அந்த விற்பனை பெயருக்கேற்றவாறு விலையும், தரமும் அமையும் பட்சத்தில் அந்த விற்பனை பொருளானது சந்தையில் உள்ள மற்ற பொருளிலிருந்து தனித்துவம் பெருகிறது என்றும்எண்ணினார்.  இப்படியாக பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு விற்பனைப்பெயர் தான் இன்று இந்தியா முழுவதிலும்கோலோச்சும் “அமுல்” (AMUL) என்பது.

“அமுல்யா” என்பதற்கு சமஸ்கிருதத்தில் “விலைமதிப்பற்றது” என்று பொருள். இன்று அமுல் என்னும் விற்பனைப் பெயர் இந்திய மக்களிடையே பேராதரவை பெற்று பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் முதல் இடத்தில் கோலோச்சிகிறது.  அமுல் என்ற விற்பனைப் பெயர் 1957ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக விளங்கியது டாக்டர் குரியன் அவர்களின் தொலை நோக்கு பார்வையும் அதனை ஒட்டிய திட்டங்களுமே ஆகும்.

ஆனந்தில் தேசிய பால் அபிவிருத்தி வாரியம் (National Dairy Development Board in Anand)

வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த கூட்டுறவு முறை பால் உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனை, தனித்துவம் பெற்ற வியாபாரப்பெயர் மூலம் சந்தையை பிடித்தல், கிடைக்கப் பெற்ற லாபத்தை உற்பத்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர வருமானம், கிராமங்களுக்கும் நகரத்திற்கும் இணைப்பு பாலத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றை புரிந்து கொண்ட அன்றைய பாரதத்தின் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தேசிய பால் அபிவிருத்தி வாரியம் (National Dairy Development Board) ஒன்றை அமைப்பதற்கு உத்தரவிட்டார்.  அதோடு மட்டுமல்லாமல் டாக்டர் குரியன் அவர்களையே அவ்வாரியத்தின் முதல் தலைவராகவும் நியமனம் செய்தார்.  டாக்டர் குரியன் அவர்கள் 1965ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை இவ்வாரியத்தின் தலைவராக இருந்து இந்நாட்டின் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் பல்வேறு திட்டங்களை வகுத்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.  அவற்றுள் ஒன்றுதான் பால் பெருக்கு திட்டம் (Operation Flood) என்பதாகும்.

பால் பெருக்கு திட்டம் (Operation Flood)

உலகிலேயே மிகப்பெரிய கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் இது ஒரு முக்கியமான திட்டமாகும்.  இத்திட்டம் 1965ல் தொடங்கி 1998ல் முடிவுற்றது.  இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பால் கொள்முதல் செய்து அருகில் இருக்கும் நகரவாழ் மக்களுக்கு தங்கு தடையற்ற பாலை விநியோகம் செய்தல்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான வசதிகளான கறவைமாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்தல், கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர் விதைகளை விநியோகம் செய்தல், கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், கால்நடை மேலாண்மையில் கண்டறியப்பட்ட புதிய உத்திகளை உற்பத்தியாளர்கிடையே கொண்டு சேர்த்தல், உற்பத்தியாளர்களுக்குத் தேவையான வங்கி கடன் பெற்று தருதல், கால்நடைகளை காப்பீடு செய்தல் போன்றவற்றை திறம்பட வழங்குதல்.
கறவை மாடுகளின் உற்பத்தி திறனை கலப்பினச் சேர்க்கை இனவிருத்தி மூலம் மேம்படுத்துதல்.
பால் உற்பத்தியின் சங்கிலித் தொடரில் உற்பத்தியாளர்கள் முதல் வாடிக்கையாளர் வரை உள்ள பல்வேறு நிலைகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

இவ்வாறாக பால் பெருக்கு திட்டம் மூலம் இந்தியாவிலுள்ள கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கிடையே கூட்டுறவு முறையை அறிமுகப்படுத்தி அதன் விளைவாக கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு டாக்டர் குரியன் அவர்கள் ஒரு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கினார்.

மேலும் டாக்டர் குரியன் அவர்கள் குஜராத் கூட்டுறவு பால் வணிக கூட்டமைப்பு (Gujarat Cooperative Milk Marketing Federation) உருவாக்கத்திற்கும், ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனம் (Institute of Rural Management, Anand)உருவாக்கத்திற்கும் ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் இந்தியா இன்று பால் உற்பத்தியில் முதலிடத்தில் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் வெண்மை புரட்சியாகும்.  வெண்மை புரட்சியில் கூட்டுறவு பால் உற்பத்தி முறை ஒரு முக்கிய அங்கமாகும்.  கூட்டுறவு பால் உற்பத்தி, அமுல் உருவாக்கம், பால் பெருக்கு திட்டம், தேசிய பால் அபிவிருத்தி வாரியம், இன்னும் பிற கூறுகள் வெண்மை புரட்சியின் அடித்தளமாகும்.  இந்த அடித்தளத்திற்கு வழி கோலியவர் டாக்டர் குரியன் ஆவார்.  டாக்டர் குரியன் அவர்களை வெண்மை புரட்சியின் தந்தை(Father of White Revolution) என்று புகழாரம் சூட்டுவதில் இந்தியா பெருமை கொள்கிறது. இதன் அடிப்படையில் தான்டாக்டர் குரியன் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 26ஐ தேசிய பால் தினமாக ஆண்டுதோறும் இந்தியா கொண்டாடிவருகிறது.

கட்டுரை ஆக்கம்முனைவர். கி. ஜெகதீசன், பி.எச்.டி

உதவிப் பேராசிரியர்.விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்

மின்னஞ்சல்: [email protected]

கைப்பேசி: +91-95660-82013  

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!