163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்..

மதுரை கோட்டத்தில் 63 ஆண்டுகள் பழமையான
நீராவி இன்ஜின் மூலம் ரயில் முதல் முறையாக இயக்கப்பட்டது. ரயில் என்றாலே நீராவி இன்ஜின் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். துவக்க காலத்தில் ரயில் போக்குவரத்து நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்பட்டது. அதை நினைவுகூறும் வகையில் தெற்கு ரயில்வே சென்னை பகுதியில் பாரம்பரிய ரயில் ஓட்டம் அடிக்கொருமுறை நடத்தப்படுகிறது.

மதுரை கோட்டத்தில் திருச்செந்தூர் -ஸ்ரீவைகுண்டம் இடையே பாரம்பரிய ரயில் ஓட்டம் முதல் முறையாக இன்று ( 17. 11. 2018 ) நடத்தப்பட்டது. இந்த பாரம்பரிய ரயில் ஓட்டத்தை மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ஓ. பி.ஷாவ் துவக்கி வைத்தார். 33 கிமீ தூர திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் பயணத்தில் நாசரேத் ரயில் நிலையத்தில் நீராவி உற்பத்திக்கு தண்ணீர் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டது. 40 இருக்கைகள் கொண்ட இந்த பாரம்பரிய ரயில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.500 கட்டணம், சிறியவர்களுக்கு ரூ.400 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்று இன்னும் 3 பாரம்பரிய ஓட்டங்கள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் இயக்க நாட்கள் பின்பு அறிவிக்கப்படும். இந்த ரயில் ஓட்டத்தில் பழமையான ஈஐஆர் 21 என்ற வகை நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டது.  இந்த வகை நீராவி இன்ஜின் 1855-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது.

இந்த வகை நீராவி இன்ஜின் மற்றும் இதன் சமகால இளையவரான தேவதை அரசி என்ற நீராவி இன்ஜின்கள் 1857-ஆம் ஆண்டு போர்ப்படைகளை அனுப்புவதற்கு பயன்படுத்தப்பட்டன. இங்கிலாந்திலிருந்து கப்பல் மூலமாக 1857-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஈஐஆர் 21 என்ற இந்த நீராவி இன்ஜின் 1909 வரை கிழக்கிந்திய ரயில் கம்பெனியால் ரயில் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த இன்ஜின் ஜமல்பூர் பணிமனையிலும் கொல்கத்தா ரயில் நிலையத்திலும் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த இன்ஜினின் முக்கிய பாகங்கள் துருப்பிடித்து எதற்கும் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 2010-ஆம் ஆண்டு பெரம்பூர் நீராவி இன்ஜின் பணிமனைக்கு இந்த இன்ஜின் கொண்டுவரப்பட்டு புனரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த இன்ஜின் பாரம்பரிய ரயில் ஓட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image