இந்தியாவின் நீரிழிவு நோய் தலைநகரமாக தமிழ்நாடு மாறிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை….

தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் 15-18% மாகவும், ஊரகப்பகுதிகளில் 6-8%மாகவும் நீரிழிவு நோய் பரவலாக ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இளம்வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு (14-18 வயது) உடல்பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுவதாக பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம்வயது நீரிழிவு நோய் அல்லது முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. நகர்ப்புற பகுதிகளில் 15-18%மாகவும், ஊரகப்பகுதிகளில் 6-8%மாகவும் பரவிவரும் நீரிழிவு நோயானது, தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால், நாட்டிலேயே அதிகபட்ச நீரிழிவு நோயாளிகளை கொண்டதாக தமிழ்நாடு மாறிவிடும். 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 72 மில்லியனுக்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் நிகழ்வுகள் பதிவாகியுள்ள நிலையில், உலக நீரிழிவு நோய் தலைநகரமாக இந்தியா பெறுமானால், இந்தியாவின் நீரிழிவு நோய் தலைநகரமாக தமிழ்நாடு உருவாகும் நாள் வெகுதூரமில்லை. ஒவ்வோராண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நீரிழிவு நோய், சிறுநீரகம் மற்றும் இதய மருத்துவ வல்லுநர்களால் இந்த தகவல்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நீரிழிவுநோய் நிபுணர் டாக்டர் சிஆர் மகேஷ் பாபு கூறுகையில், “தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இளம்வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு (14-18 வயது) உடல் பருமன் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதாக பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துரிதஉணவு கலாச்சாரம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளுதல் போன்றவை இளம்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு வழிவகுத்துள்ளன. மனஅழுத்தம் மற்றும் மாற்று உணவு முறைகளின் காரணத்தால் மென்பொருள் பொறியியலாளர்களிடையே நீரிழிவு நோய் மிக பரவலாக சாதாரணமாக காணப்படுகிறது. இளைஞர்களுக்கு நீரிழிவு நோயானது, ஊட்டச்சத்து குறைந்த நொறுக்குத்தீனி உட்கொள்வது மற்றும் மது அருந்துவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. காசநோய், டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் பல தீவிர திட்டங்கள் இருப்பினும், நீரிழிவு நோய் போன்ற பரவாத நோய்களுக்கு மிக சில திட்டங்களே உள்ளன. இத்திட்டங்களை கிராமப்புற மக்களை நீரிழிவு நோய் ஆய்வுகள், வாழ்வியல் மாற்றம் மற்றும் உணவு குறித்த ஆலோசனை, அறிவுரை வழங்குவதற்காக விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். நீரிழிவுநோயயை தவிர்ப்பதற்கு, நீரிழிவு நோய் குடும்ப வரலாறு உள்ளவர்கள், 25 வயதை கடந்தவுடன் பரிசோதனை செய்தவது அவசியம். உடல்பருமனால் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைப்பதற்கு முற்பட வேண்டும்,” என்றார்.

டாக்டர் சி ஆர் மகேஷ் பாபு மேலும் கூறுகையில், “இளம்வயது நீரிழிவு நோய் அல்லது முதல் வகை நீரிழிவு நோய் தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. எங்களுடைய மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் குறைந்தது முதல் வகை நீரிழிவு நோய் உள்ள ஒரு நோயாளியாவது சிகிச்சைக்கு வருகின்றனர். இது ஒரு தன்னியக்க எதிர்ப்பு நோயாக இருப்பதால் ஒருவரின் வாழ்க்கைமுறையைக் குறைசொல்ல முடியாது. இந்த நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுக்க இன்சுலின் கொடுக்கப்பட வேண்டும். நவீன இன்சுலின் குழாய்கள் மற்றும் பாதி செயற்கை கணையம் ஆகியவை அவர்களின் ஆரோக்கியத்திற்கு தகுந்த சிகிச்சைகளாகும். இப்போது மக்களிடையே நீரிழிவு நோய் பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளபோதிலும், மருத்துவரிடம் தவறாது ஆலோசனை பெற வேண்டும் என்பதை நோயாளிகள் இன்னும் உணரவில்லை. சில நோயாளிகள் மருத்துவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்கிறார்கள்,” என்றார்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, முதுநிலை இருதயவியல் நிபுணர் டாக்டர் N. கணேசன் கூறுகையில், “நீரிழிவு நோய் இருதயம், சிறுநீரகம் மற்றும் கண்களை சிதைக்கும் தன்மை கொண்டது. நீரிழிவு நோயாளிகளின் இறப்புக்கு இருதயநோய் மிகவும் பொதுவான காரணமாகும். நீரிழிவு நோய் இல்லாதவர்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் இறப்பதற்கு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பகுப்பாய்வு செய்யும் சமயத்தில் நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கனவே இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எஞ்சிய நோயாளிகளுக்கும் 10 ஆண்டுகளுக்குள் இருதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உயர் இரத்த சர்கரையானது, இருதயம் மற்றும் இரத்தக்குழாய்களை கட்டுப்படுத்தக்கூடிய இரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சிதைக்கிறது. நோய் வருமுன் காப்பது சிறந்தது.எனவே, 80%-க்கு மேற்பட்ட நீரிழிவு நோய்களை ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, தவறாமல் உடற்பயிற்சி செய்தல், வெள்ளை சர்க்கரை மற்றும் வெள்ளை அரிசி, கோதுமை மற்றும் வெள்ளை ரொட்டி போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். நீரிழிவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய இடுப்பைச்சுற்றி ஏற்படும் கொழுப்பு சேகரிப்பை மக்கள் தவிர்க்க வேண்டும்,” என்றார்.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர். ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் கூறுகையில், “நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தமிழ்நாட்டில் சிறுநீரக நோய் நிகழ்வை அதிகரிக்கின்றன. இந்தியாவில் அதிக நீரிழிவு நோய் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நிகழ்கிறதுமற்றும் அனைத்து நீரிழிவு நோயாளிகளில் 30%த்தினருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் உருவாகக்கூடும். தமிழ்நாட்டில் ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 16,000 நோயாளிகள் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகால சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு முக்கியனதாகும். CKD என்பது, இருதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகிய இரண்டிற்கும் பயங்கர விளைவுகளுடைய ஒரு பெருகக்கூடிய நோயாகும். உண்மையிலேயே, இறுதிகட்ட சிறுநீரக நோயில் உள்ளவர்களில் 20%-க்கும் குறைவானவர்கள் இறுதிகட்டத்தை அடைவார்கள். ஏனெனில் இருதயநோய் காரணமாக மிகவும் முன்னதாக இறந்துவிடுவார்கள்,” என்றார்.

மேலும், மருத்துவ நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளின் உடல்நல முடிவுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதில் குடும்பத்தாரின் பங்கை வலியுறுத்தியுள்ளனர். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, சிகிச்சையை பின்பற்றுதல், சரியான மருத்துவ பரிசோதனைகள், உணர்வுப்பூர்வமான மற்றும் நிதியுதவி ஆகியவற்றை உறுதிசெய்வதில் நோயாளியின் குடும்பத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.

மதுரை செய்தியாளர்: கனகமுனிராஜ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..