நாட்டுக் கோழி வணிகக் கோழியான வரலாறு…

வணிகக் கோழி (Commercial Chicken) என்றால் என்ன? கோழிக் கூட்டங்களை எதன் அடிப்படையில் நாட்டுக் கோழியென்றும் (Native / Desi Chicken), வணிகக் கோழியென்றும் வகைப்படுத்துகிறோம்? வணிகக் கோழியில் கறிக் கோழியென்றும் (Broiler Chicken), முட்டைக் கோழியென்றும் (Layer Chicken) ஏன் மேலும் பிரித்தறியப்படுகிறது? கறிக் கோழியென்பவை முட்டையிடாதா? முட்டைக் கோழியென்பவை இறைச்சியைத் தருவதில்லையா? எதற்காக கோழியானது கறி, முட்டையென முத்திரைக் குத்தப்படுகிறது? என்ன தான் சங்கதி?

நாம் இன்றைய வணிகக் கோழிப் பற்றி தெரிந்துக்கொள்ள நேற்றைய நாட்டுக் கோழியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். சுற்றித் திரியும் சுதந்திர கோழிகள் எனும் நாட்டுக் கோழியென்பவை மிகக் குறைந்தளவே உடல் எடை கூடும் (Lower Body Weight Gain) (மரபுத்)திறனையும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (Low Egg Numbers) முட்டையிடும் (மரபுத்)திறனையும் பெற்றவை.

நல்லநாள் பெருநாள் பார்த்து இறைச்சியுண்ணும் கலாச்சாரம் நம்மில் இருந்தவரையில் நாட்டுக் கோழி தெருக்களை வலம்வந்துக் கொண்டும், கூரை மீது நின்று கூவிக் கொண்டும், குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டும் சுதந்திரமாய் வாழ்ந்து வந்தன. சுதந்திரக் கோழிகள் சுயமாய் வளர்ந்தன. யாராலும் வளர்க்கப்பட வில்லை. அவைகளை பொழுது சாய்ந்தால் கொடாப்புகளில் அடைப்பதும், பொழுது விடிந்தால் விடுவிப்பதுமே மனிதன் செய்த மேலாண்மை.  

குப்பை மேட்டிலிருந்து ஆழ்கூளத்திற்கு (Backyard to Deep Litter)

காலப்போக்கில் மனிதன் தினமொரு முட்டையையும், வாரமொருமுறை இறைச்சியையும் உண்ண விழைந்தான். ஊட்டச் சத்தியல் ரீதியான தேவையுமிருந்தது. விளைவு? தெருக்களில் சுற்றித் திரிந்த கோழிகள் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டன. உணவைத் தேடி குப்பையை கிளறிய கோழியின் கால்களுக்கருகிலேயே குறுணைத் தீவனம் வட்டத் தட்டில் வர ஆரம்பித்தன. வெயில், மழைக்கு திண்ணையோரம் ஒதுங்கும் தேவை இல்லாமற்போனது. கிட்னாப் (Kidnap) செய்யவரும் பருந்துகளுக்கும், டீஸிங் (Teasing) செய்யும் நாய்களுக்கும் பயந்து முள்வேலிகளிலும், வைக்கோல் போர்களிலும் ஓடி ஒளிய வேண்டிய அவசியமும் இல்லாமற்போனது. தட்டிலிடப்பட்ட குருணையை கொத்தியும், கிண்ணத்தில் ஊற்றப்பட்ட நீரில் மூக்கை முக்கியும் தன் பசியையும், தாகத்தையும் தணித்துக் கொண்டன.  

பசித்த போதெல்லாம் கூட்டங்கூட்டமாய் இரையைத் தேடி பொறுக்கி விழுங்கிய பழக்கம் போய் காலை, மாலையென மணியடித்த நேரத்தில் மட்டும் டைனிங் (Dining) செய்யும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொண்டன. சத்தான அன்லிமிட்டெட் உணவு, கூலான குடிநீர், தென்றல் புகுந்துவர வலைப்பின்னல் சுற்றுச்சுவர், காலாற உலாவற மெதுமெது ஆழ்கூளம் இப்படி பலப்பல சௌகரியங்கள், சாதகங்கள்ஆனால் அவைகளிடமிருந்து கட்டற்ற சுதந்திரம் மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆம். சுற்றித் திரியும் சுதந்திரம் மட்டும் தொடுவானம் (Horizon) சுற்றளவிலிருந்து கோழியொன்றுக்கு இரண்டடியாக (2 sq.ft.) இறுக்கப்பட்டன.

ழ்கூள அறைக்குள் அடைப்பட்ட கோழிகள் அவ்வப்போது பேந்த பேந்த பவனி வந்தன. காலங்காலமாக குப்பை மேடுகளையும் கூரை உச்சிகளையும் ஏறி இறங்கிய கால்களை அடக்கவா முடியும்? இங்கும் அங்கும் ஓடி முன் ஜென்ம நினைவை (Epigenetic Memory) நனவாக்கிக் கொண்டன. விடிவெள்ளி சிரிக்கையில் கொக்கரக்கோ பூபாளம் பாடிய கொண்டைச் சேவல் இப்போது நேரகாலம் தெரியாமல் முராரியில் ஒப்பாரியிட்டது. கட்டாந்தரையையும், களத்துமேட்டையும் கொத்தாததால் மூக்கு கூர்மையாக உருமாறின. மெஸ் டைமிங் தவிர மற்ற நேரங்களில் சும்மா இருக்க முடியாமல் வலியார் மெலியார் பாராமல் பங்காளிச் சண்டை போட்டன (Feather Pecking, Vent Pecking, Cannibalism). சண்டையில் கிழியாத சட்ட உண்டா? சில நேரங்களில் மரணம் கூட ஏற்பட்டன.

கோழியின் மரணத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? வாடிய பயிரைக் கண்டபோதே வாடினவனாயிற்றே! பதைபதைத்தது மனது. துயர் துடைக்க எண்ணிணான். கோழியின் நுனி மூக்கு பழுத்த இரும்புத் தகட்டில் (700oC) தொட்டு பொசுக்கப்பட்டன (Debeaking / Beak Trimming). ஆம். சத்தியமாக இது தொழில் நுட்பம் தான்! சிறைப்பட்ட கோழிகளனைத்தும் உணவு வேளையைத் தவிர மற்ற நேரங்களில் செய்வதறியாது பெனாத்த ஆரம்பித்தன. அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளும் (Vaccines) தவறாமல் அளிக்கப்பட்டன.   

ழ்கூளத்திலிருந்து கம்பிவலை கூண்டிற்கு (Deep Litter to Iron Cage)

நாளெல்லாம் அறையில் சுற்றி வந்தால் மூச்சிறைக்காதோ? கால் கடுக்காதோ? சோர்ந்து போகாதோ? துடிதுடித்தான் பாரி பேரன். முல்லைக்கு தேர் கொடுத்த பரம்பரையாயிற்றே! விளைவு? கம்பிவலை கூண்டு! ஆம். கனநேரத்தில் கபாலத்தில் உதித்த தொழில் நுட்பம் தான் இது! இரண்டடி சுதந்திரம் இப்போது ஓரடியாயிற்று (1cu.ft). கூரை மீதேறி கழுத்துயர்த்தி உச்சஸ்தாயியில் மங்கள பாட்டிசைத்து விடியலை வெளுத்தது ஒரு காலம். இன்றோ இந்த ஓரடி கூண்டினுள்ளே முழுவதுமாய் திரும்பக் கூட முடியாத நிலை. தனியார் பேருந்து இருக்கையோடல்லவா போட்டி போடுகிறது இந்த கூண்டு தொழில் நுட்பம்.

துரத்திப் பிடித்து பிடரி கவ்வி கனநேரத்தில் கலவி கொண்டால் தாங்குமா இந்த வெடக்கோழி? நினைக்கும் போதே மூச்சு முட்டியது இவனுக்கு! படபடத்தது இவன் நெஞ்சு! விளைவு? தனித்தனி கூண்டு இளஞ்சேவலுக்கும் (Cockerel), வெடக்கோழிக்கும் (Pullet)! ஆம். இதுவும் தொழில் நுட்பம் தான். அதே சமயத்தில் பருவமெய்திய பெட்டைக் கோழிகள் கன்னி கழியாமல் இருந்தால் இவனுக்கல்லவா பாவம்! பார்த்தான். தலையை சொறிந்தான். விளைவு? செயற்கைமுறை கருவூட்டல் (Artificial Insemination) தொழில்நுட்பம். ஒரு நாள் இடைவெளியில் ஒவ்வொரு சேவலின் ஆசனவாயும் (Cloaca) இலகுவாக பிசையப்பட்டு, விந்துப் பால் பிழியப்பட்டன. பெட்டையின் பிடரி மயிர் கவ்வப்படாமலேயே செயற்கைமுறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டது.

முன் வழி உணவும், பின் வழி விந்தணுவும் புகுத்தியாயிற்று.  என்ன செய்யும் இந்த பாவி பெட்டைக் கோழி கருவுற்ற முட்டைகள் (Fertile Eggs) இடுவதைத் தவிர! ஆண்டிற்கு 80 முட்டைகளிட்ட காலம் போய் இப்போது 350 முட்டைகளை வரை இட ஆரம்பித்து விட்டாள். தினம் ஒரு முட்டைதினம் ஒரு பிரசவம்செக்கச் சிவந்த வாய் உமிழும் முட்டை வெள்ளைவெளேரென்று இருப்பது ஒரு வினோதம் தான்! ஆஃப் ஃபாயிலில் மஞ்சள் கரு உடைந்ததற்கு ரகளையிடும் இவனுக்கெங்கே தெரியப் போகிறது இந்த (ஆசன)வாயெரிச்சலெல்லாம்? 20ஆம் வார வயதில் ஆரம்பித்த எரிச்சல் 40ஆம் வாரத்தில் உச்சத்தை தொட்டது. அதற்கப்புறம்? அதுவே பழகிபோனது 72ஆம் வாரம் வரை!

பூலோகத்திலிருந்து கைலாசத்திற்கு

இப்படி சுதந்திரம் பறிக்கப்பட்டு, மூக்கு அறுப்பட்டு, தீவனம் விழுங்கி, குப்பென்று உடல் பருத்தோ அல்லது முத்து முத்தாய் முட்டையை இட்டோ செய்த நன்றிக்காக கழுத்தும் அறுபட்டு கைலாசம் செல்லும் இந்த கோழிகளே வணிகக் கோழிகள் என்பவை. இவற்றில் பிறந்தது முதல் 6 வார வயதுவரை 2 கிலோ தீவனத்தை விழுங்கி 2 கிலோ உடல் எடையை அடைந்து கழுத்தறுப்பட்டு கைலாசம் செல்லும் கோழிக்கு கறிக் கோழியென்றும், 365 நாட்களில் 350 முட்டைகளையிட்டு தனது 72 வது வார வயதில் கழுத்தறுப்பட்டு கைலாசம் செல்லும் கோழிக்கு முட்டை கோழியென்றும் பெயர்.

கருவுற்ற முட்டையிலிருந்து முட்டை பொறிப்பானுக்கு (Fertile Egg to Egg Hatcher)

72ஆம் வார அகவையை எட்டிய கிழட்டுக் கோழி (Spent Chicken) கைலாசம் சென்றப் பின் அது இட்ட கருவுற்ற முட்டைகளுக்கென்னவாயிற்று என்று தானே கேட்கிறீர்கள்? நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் இடப்பட்ட முட்டைகளனைத்தும் கவனமாய் சேகரிக்கப்பட்டு, அலுங்காமல், குலுங்காமல் காப்பகத்தில் (Incubator) அடைவைக்கப்பட்டு (Brooding) 21ம் நாள் பொறிப்பானில் (Hatcher) மொசு மொசு குஞ்சுகளாய் பொறித்தெடுக்கப்பட்டன! பெட்டைக் கோழியின் இறக்கையால் அணைபட்டு மார்பில் புதையுண்டு பெற்றிருக்க வேண்டிய கதகதப்பையும் (Warmth), ஈரப்பதத்தையும் (Humidity) எந்திரக் காப்பகம் ஊதித்தள்ளியது. அடைக்கோழியின் அந்த தாய் பாசத்தை (Maternal Instinct), அந்த வாசத்தை, அந்த முனகலை, அந்த தாலாட்டை தருமா இந்த இரும்புத் தாய்? பொதுவாக, விலங்கினங்களில் தாய் பாசம் மட்டுமே குட்டிகளுக்கு கிடைக்கும். தந்தை பாசம் என்ற ஒன்று விலங்கினங்களில் இல்லவே இல்லை. எந்திரத்தால் பொறிக்கப்பட்ட இந்த நவீன குஞ்சுகளுக்கு அந்த தாய்-சேய் பாசமும் வெட்டப்பட்டது.

ஒரு காலத்தில் தாயால் அடைக்காத்து பொறித்தெடுக்கப்பட்ட கோழிக் குஞ்சுகள் ஒரு தாய் பிள்ளைகளாக (Siblings) குடும்பமாய் (Family), கொத்தாய் (Bunch), கெத்தாய் (proud) மொன மொனத்து (Peep Peep) சுற்றித் திரிந்தன. அலங்காரமில்லாமல் வீதி உலா வந்தன. பாம்புகளிடமிருந்தும், பருந்துகளிடமிருந்தும் ஒன்றையொன்று காத்து வாழ்ந்த காலம் போய் இப்போது கூட்டமாய் ஆனால் குழு உணர்வற்று (Lack of Oneness Feel), சகோதரத்துவமற்று (Lack of Brotherhood Feel), சூடு சொரணையற்று (Lack of Reactions) நடமாடும் பஞ்சுமிட்டாயாக பரிணமித்தன (Evolved). ஆம். பாப்கார்னைப் (Popcorn) போல பொறிக்கப்பட்ட இந்த குஞ்சுகளுக்கு ஆபத்து நேரங்களில் அலறியடித்து ஓடவோ (Running), பறக்கவோ (Flighting), கூச்சலிடவோ (Shouting), கலகம் (Fighting) செய்து தப்பிக்கவோ (Escaping) தெரியாமல் போனது. மொத்தத்தில் தன்னை காத்துக்கொள்ளும் (Self Protection) சுயத்தை இழந்து போனது. விலங்கினங்களில் இன அழிப்பு (Breed Extinction) என்பது அவ்வினத்தின் உருவத்தையும் (Appearance), உற்பத்தியையும் (Produces) மாற்றுவது மட்டுமல்ல. அவ்வினத்தின் இயற்குணாதிசயங்களை (Natural Behaviour / Instincts) மாற்றுவதும் இன அழிப்பே.

மரக்கிளையில் துயிலெழுந்து காடுகளில் சுற்றித் திரிந்து புற்புழுக்களை உண்டுவந்த வண்ண காட்டுக் கோழியை (Red Jungle Fowl) ஊருக்குள் கொண்டு வந்து நாட்டுக் கோழியாக்கியதும், நாட்டுக் கோழியைஅறிவியல் தொழில்நுட்பம்துணை கொண்டு வணிகக் கோழியாக்கியதுமே மனிதனின் மாபெரும் சாதனை. மனிதனின் புரதத் தேவைகணிசமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இலட்சியத்தை (End) போன்றே வழிமுறைகளும் (Means) உயர்வானதாக தானே இருக்க வேண்டும்? Is it not “means are as important as ends”?    

 

குறிப்பு: கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு கட்டுரையாசிரியரே முழு பொறுப்பு. அவர் சார்ந்த பல்கலைக்கழகமோ அல்லது வேறு சில அமைப்போ அல்ல.

கட்டுரை ஆக்கம்முனைவர் கி. ஜெகதீசன், பி.எச்.டி.

உதவிப் பேராசிரியர்,  விலங்கின மரபணுவியல் மற்றும் இனவிருத்தியல் துறை

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்

மின்னஞ்சல்: [email protected]

கைப்பேசி: +91-95660-82013

To Download Keelainews Android Application – Click on the Image