இராமநாதபுரம் அருகே பச்சை மரகதக் கல் நடராஜர் சுவாமி சிலையை திருட முயற்சி..காவலாளி மீது தாக்குதல்..

இராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற மங்களநாதசாமி கோயிலில் பச்சைக்கல் மரகத நடராஜர் சுவாமி சிலையை மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. பூலோகத்தில் தோன்றிய முதல்  திருத்தலம் என கருதப்படும் இக்கோயில் வளாகத்தில் தனி சன்னதியில் ஒரே கல்லிலான 4 அடி உயர  பச்சை மரகதக்கல் நடராஜர் சுவாமி சிலை உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இச்சிலையை நேற்று நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் திருட முயன்றனர்.

இதனை தடுக்க முயன்ற காவலாளி செல்லமுத்துவை தாக்கினர். அப்போது கோயில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர். படுகாயமடைந்த செல்லமுத்துவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் விசாரிக்கிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..