இராமநாதபுரம் பகுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா…

இராமநாதபுரம் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்.29 முதல் நவ.3 வரை ஊழல் விழிப்புணர்வு வார கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி இராமநாதபுரம் அண்ணா பல்கலைக் கழகம் நிலையம், பொறியியல் கல்லூரி, சித்தார்கோட்டை, உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது, “நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக ஊழல் உள்ளது . பொதுமக்கள் அரசு, தனியார் துறை உட்பட அனைவருமே ஊழலை முற்றிலும் ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம். நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுவோம். பொதுமக்கள் தங்கள் காரியங்களுக்கு அரசு அலுவலங்களுக்கு சென்று முறையாக மனு கொடுக்க வேண்டும் . கட்டணம் செலுத்த வேண்டி இருப்பின் கட்டண தொகையை மட்டுமே செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்று வரவேண்டும். அரசு அலுவலகங்களில் தங்கள் காரியங்களை செய்து கொடுக்க லஞ்சமாக பணம் கேட்டால் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுக்க வேண்டும் . அரசு அலுவலகங்களில் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள லஞ்சமாக பணம் கொடுத்தாலும் அரசு அலுவலகங்களில் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்தப்படும் போது அதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவதாக அறிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும் . பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் . எனவே , லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் சட்டப்படியான கடமையை செய்வதற்கு பொது மக்களாகிய உங்களிடம் லஞ்சமாக பணமோ பொருளோ அல்லது பிரதியுபகாரம் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏஜென்ட்கள் மூலமாகவோ வேண்டினால் தயங்காமல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினருக்கு தகவல் அல்லது புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஊழல், லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியம் காக்கப்படும், ஊழல் லஞ்சம் சம்பந்தமாக காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, புகார் அல்லது தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியை இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்பாடு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..