பயணம் – 4, பயணங்களும்… பாடங்களும்.. தொடர் கட்டுரை.

முன்னுரை:-

பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை  9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கட்டுரையின் தொடர்ச்சி…

நம்மைச்சுற்றி ஏராளமான இடங்கள்  உள்ளன. இறைவனின் படைப்பில் ஆச்சரியங்களும் விநோதங்களும்  மகிழ்ச்சியும் கலந்த இடங்கள் உள்ளன. நாம்தான் தேடிக்கொண்டே போகவேண்டும். பொள்ளாச்சி அருகே மலையின் மேலே டாப்ஸிலிப் என்ற மிருகங்கள் கூட்டமாக வாழும் இடம் உள்ளது. திரில்லிங் வேண்டும் என்பவர்களுக்கு நிறைய தீனிகள் போடும் இடம்.

காடுகளின் நடுவே காட்டேஜ் என்ற தங்குமிடங்களை அமைத்து இருக்கிறார்கள். காடுகளின் இடையே  மரங்களில் பரண்வீடுகளை அமைத்து இருக்கிறார்கள்.  உயரமான அங்கிருந்து காடுகளின் முழுப்பரப்பையும்  மிருகங்கள் இடையூறு  இல்லாமல் உலவிவருவதையும் காணலாம்.

காட்டின் நடுவே  கிளாஸ்ஹவுஸில் தங்கிப்பாருங்கள். மின்சாரம் கிடையாது. இரவில் மெழுகுவர்த்திகளும் சார்ஜர் விளக்குகளும்தான் வெளிச்சத்தை தரவேண்டும்.  இரவுகளில் யானையின் அருகாமை பிளிறல்கள். சிறுத்தைகளின் உறுமல்கள். சில்லிடும் வண்டுகள்.  சிலீரென பெருங்காற்று. சத்தமில்லாத போது நட்சத்திரங்கள் மின்னும் வான்வெளியின் இருள்களும் ஓசைகளே இறந்துவிட்டதோ எனும் அளவிற்கு நிசப்தம். (Pin drop silence).  சாம்பல்களை திண்ண அலையும் யானைகள். நம் காட்டேஜ்களின் கதவுகளையும் தட்டிப்பார்க்கும்.

நம்முடன் ஹெல்பர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் சமைக்கவும் நமக்கு அச்சம் ஏற்படாமல் ஏராளமான திரில்லான அனுபவங்களை பிரமாண்டமாக கூறுகிறார்கள். காடுகளுக்குள் வாகனங்களில் செல்லவேண்டும்.  காடுகளின் இடைவெளிகளில் போடப்பட்டு இருக்கிற ரோடுகளில் காலாற நடந்துபோனால் குறுக்கிடும் நீரோடைகள். அவ்வளவு அழகாகவும், அவ்வளவு ருசியாகவும் மீன்கள்.

பரண்களில் படுத்து இரவுகளில் மிருகங்களை பார்த்தவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.  டிரக்கிங் என்னும் மலைவழி நடைபயணத்திற்கும் அழைத்துச் செல்கிறார்கள். ஆயுதங்களோடு உடன் வழிகாட்டிகள் வருகிறார்கள். அங்கங்கே யானைகளின் சூடான லத்தியையும், சிறுத்தைகளின் உறுமலையும்  கேட்டுக்கொண்டே நடக்கலாம்.  யானைசவாரி உள்ளது. யானைமேல் அம்பாரியில் அமர்ந்து காட்டின் சிறுபகுதியை சுற்றிவரலாம். யானைமேல் அமர்ந்து  எப்படி போரிட்டார்கள்  என்பது வியப்பாக உள்ளது. யானைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் முகாம் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளது.  யானைகளை வரிசையாக வைத்து அதற்கான பல புத்துணர்ச்சி ஊட்டும் செயல்களை செய்கிறார்கள்.

திரும்பி மலைப்பாதையில் வரும்போது இறைவனின் படைப்புகளையும் அதிசயங்களையும் வியக்காமல் இருக்கமுடியாது. அவைகளை மனிதன் கட்டுப்படுத்தி ஆளுவது உலகில் எல்லாவற்றையும் மனிதனுக்காக  படைத்தேன் என்ற திருக்குர்ஆனின் கருத்துகள் நெஞ்சில் நிறைகிறது.

பேசுவோம்…! இறைவன் நாடட்டும்..!

புனித ரமலான் வாழ்த்துக்கள்..