
முன்னுரை:-
பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும். இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது. உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை 9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
பயணங்கள் தொடர்கிறது…
சுற்றுலாக்கள் முன்காலங்களில் எளிமையாக இருந்தது. அருகிலுள்ள ஊர்களுக்கு, நீர்நிலைகளுக்கு, தோட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை கதைகள் பேசி விளையாடி வருவர்.
முன்காலங்களில் கூட்டாஞ்சோறு என்று ஒரு எளிய நிகழ்வில் குடும்பத்து அத்தனை உறவினர்களும் ஒன்று சேர்ந்து வண்டி கட்டிக் கொண்டு தோட்டங்களுக்கு போய் ஓய்வெடுத்து வருவது வாடிக்கை. கூட்டாஞ் சோறு என்பது கூட ஒரே சோறாக இல்லாமல் பலவகை சோறுகளின் கலவையாக இருந்தது. உறவுகளின் கலப்பான அந்த நிகழ்விற்கும் கூட்டாஞ்சோறு என்றே பெயர் வந்தது.
இன்று இந்த கிராமிய கலாச்சாரங்கள் மறக்கப்பட்டுவிட்டது. எல்லாவற்றிலும் வேகம், நேரம் இல்லை என்ற நகரிய சிந்தனைகள், சின்னசின்ன ஆசைகளை சந்தோஷங்களை தூக்கி எறிந்துவிட்டது. கொழுக்கட்டை, முட்டைப்பணியாரம் பூரியான் ,அச்சுமுறுக்கு, அதிரசம் என்ற கிராமிய மணம்கமழும் தீனிகள் என்னும் பொழுது போக்கு உணவுகள் வழக்கொழிந்து வருகிறது. வீடுகளில் அன்புகளால் பிசைந்து செய்யப்பட்ட தின்பண்டங்களால் உறவுகளும் பின்னிப்பிணைந்து இருந்தன. ஆனால் இன்றைய துரித உணவுக்கலாச்சாரம் கொடிகட்டி பறக்கிறது. பிஜ்ஜாக்களும், KFC சிக்கன்களும், நூடுல்ஸ்களும், பேக்கரிகளில் ரசாயணக் கலவைகளால் நஞ்சாக்கப்பட்டிருக்கும் பல வண்ண வண்ண கேக்குகளும் நாகரீக உணவாகிப்போயின.
வெளியில் வாங்கும் உணவுக் கலாச்சாரங்களால் எதையும் வாங்கிக் கொள்ளலாம் என விட்டேத்தியான மனசூழல்கள் நிலவுகிறது. இன்றைக்கு நகரங்களின் நெரிசல்களில் உடல் ஆரோக்கியங்களையும், மன ஆரோக்கியங்களையும், தொலைத்த பலர் கிராமங்களை நோக்கி சுற்றுலா செல்கின்றனர். பச்சைபசுமையான வயல்வெளிகளும், சலசலத்து ஓடும் நீரோடைகளும், கலப்பில்லாத சுத்தமான ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றும், உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
மனிதர்களுக்கு ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும் எப்போதும் கவர்ச்சியானது. டெல்டா மாவட்டங்களில் சுழித்தோடும் காவிரியில் குளித்துவிட்டு அந்த ஈரக்காற்றில் இயற்கையை ரசிப்பது குதூகலமானது. வைகையும் தாமிரபரணியும், கொள்ளிடமும், காவேரியும் வறண்டு போனாலும் அவ்வப்போது நீர்கள் சுழித்தோடி இன்பங்களை தரவே செய்கிறது.
அதிகாலை வேளையில் கிராமத்தின் மண்வாசம் கமழும் பாதைகளில் பனி ஒழுகும் பொழுதுகளில் வண்டுகளின் சில்லிடல்களோடு வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்களை ரசித்துக்கொண்டே நடந்து பாருங்கள்..! மனதின் அத்தனை ரகசிய கதவுகளும் திறந்து கொள்ளும். ஆக்ஸிஜன் முழுஅளவில் உடலில் உள்இழுக்கப்பட்டு, வெளியேற்றப்படும் கார்பன்டை ஆக்ஸைடால் உடலிலுள்ள நச்சுகளும், கழிவுகளும் வெளியேறுகிறது. உடலின் தோல்களில் ஒருவித மலர்ச்சியையும், வயதுகள் குறைந்துவிட்ட மனநிலையையும் காணலாம்.
இயற்கை மனிதனுக்கு வழங்கிய கொடைகளை அனுபவிக்கவேண்டும். கடல் உள்ள நகரங்களில் கடற்கரையை நோக்கி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரையை தாண்ட முடியாவிட்டாலும் மீண்டும் மீண்டும் கரையை நோக்கிவரும் அலைகளின் எழுச்சியும் விடாமுயற்சியும் மனிதர்களுக்கான பாடங்கள். வெண்மையாக மின்னும் கடற்கரையின் மணற்பரப்புகளில் குழந்தைகள் ஓடிவிளையாடுவது குதூகலமானது. படகுகளின் மறைவுகள் இன்றைய நகரியநெருக்கங்களில், தொலைந்து போன உறவுகளை துழாவும் சொர்க்கநுழைவுகள். இளம்ஜோடிகளின் உல்லாச பொழுதுபோக்கிடங்கள். கடற்கரைகள் நல்லவைகளையும், தீயவைகளையும் அசையாமல் வேடிக்கை பார்த்துகொண்டே இருக்கிறது. பயணக்
குதூகலங்களை தொடர்ந்துபேசுவோம்..!
இறைவன் நாடட்டும்..!
கப்ளிசேட்