பயணங்களும்…. பாடங்களும்….. தொடர் கட்டுரை….

முன்னுரை:-

பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் பலர்.  ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியர் கப்ளி சேட், பயணத்துடன், மனிதனுள் ஏற்பட வேண்டிய சிந்தனைகளை தூண்டி, அதை தேவைப்படும் இடங்களில் குர்ஆனின் உள்ள படிப்பினைகளையும் சுற்றி காட்டியுள்ளது இக்கட்டுரையின் மிகப் பெரிய பலமாகும்.  இன்று முதல் இக்கட்டுரை தொடர்ச்சியாக உங்கள் பார்வைக்கு வர உள்ளது.  உங்களுடைய கருத்துக்களை கட்டுரையின் ஆசிரியரை  9443440950 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

கட்டுரை ஆசிரியர் உரை:-

அன்பிற்கினிய நண்பர்களே… பயணங்களும் –  பாடங்களும்…! என்ற எனது கட்டுரைத்தொடரில் பயணிக்க வேண்டிய சில பாதைகளை திறந்து இருக்கிறேன். பாதைகளின் பரப்புகளில் சில செய்திகளின் பூக்களை தூவிச்சென்று இருக்கிறேன்.

பயணியுங்கள் – பயன்பெறுங்கள், என்ற வாழ்த்துக்களுடன்….

திருக்குர்ஆன் விவரிக்கிற துல்கர்ணைன் அவர்களின் பயணம் உலகம் உருண்டை என்பதை நிரூபித்தது.

பயணிக்காத மனிதன் உலகில் பாதியை இழந்துவிட்டான் என்பது அறிஞர்களின் கருத்து.

சுற்றுலா பயணங்கள் மனதில் நிம்மதியை உருவாக்குகிறது…

சுற்றுலா பயணங்கள் தேடலை ஊக்குவிக்கிறது.

அறிவை விசாலப்படுத்துகிறது…

சரியான பருவகாலத்தில், சரியான இடங்களுக்கு சுற்றுலா சென்றால் நோயாளிகள், வேதனைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிந்துவிட்ட பிறகு பாகிஸ்தானின் தந்தையாக இருந்த முஹம்மது அலி ஜின்னாவுக்கு காசநோய் ஏற்பட்டு உடல்நலகுறைவு ஏற்பட்டது. ஜின்னா மிகச்சிறந்த வழக்கறிஞர். ஜின்னா ஆஜராகும் வழக்குகள் சுவராஸ்யமாக இருக்கும். வழக்குகளின் சந்து பொந்துகளில் புகுந்து வழக்கை வெற்றியாக்குவதில் வல்லவர், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்த ஜின்னா காஷ்மீரில் ஓய்வெடுத்தால், அவரின் உடல்நிலைக்கு நன்றாக இருக்கும் என்பது மருத்துவர்களின்  அறிவுரை. ஆனால் அரசாங்கத்தால்  ஜின்னாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால்  பாகிஸ்தானின் காஷ்மீரின் மீதான ஆர்வம் அதிகரிக்கஇதுவும் ஒருகாரணம்.

மலைப்பிரதேசங்களை இறைவன் சொர்க்கங்களின் ஒரு சிறு காட்சியாகவே படைத்துள்ளான். மேகத்தை முத்தமிடும் மலைகள். மலைகளை உரசிச்செல்லும் மேகங்கள். அந்தப்பனி மூட்டங்களின்(Mist formation) வழியே தெரியும், அழகில் மனதும் அதைநோக்கி பறந்து போகும்.

உடலின் எல்லா துளைகளிலும் ஊடுறுவிச்சென்று நடுநடுங்க வைக்கிற குளிரின் இதங்கள். கதகதப்பான ரூம்ஹீட்டரின் வெப்பத்திலும் இழுத்துப்போர்த்திய கனமான கம்பளிகளின் வழியே சுவைத்துபருகும் தேயிலை இலைகளின் வாசமும் சுவையும். கண்களை சுழற்றிப்பார்த்தால் பசுமையின் பரப்புகள்.

மூணாறு போன்ற இடங்களுக்குசென்றால் தேயிலைசெடிகள் சரிவுகளில் அணிவகுத்திருக்கும் அழகு.

மிக உயர்ந்தமரங்களில் சுற்றிப்படர்ந்திருக்கும் மிளகு செடிகள். மலைகளில் காணும் பூக்களின் வகைவகையான நிறங்கள், வாசனைகள், நம் கற்பனையிலும் காணமுடியாத நிறங்களின் அணிவகுப்பில் பூக்களின் மலர்ச்சி.

அங்கங்கே வெள்ளிக்கம்பிகளை மலைகளில் உருக்கி ஊற்றுவது போல சில்லிடும் நீர்வீழ்ச்சிகள். மலையின் பரப்புகளிலிருந்து திடீரென சரியும் பள்ளத்தாக்குகள்,  தூரங்களில் அடுக்கி வைத்தது போல் தெரியும் வீடுகள்.

இரவுகளின் இருள்களில் தூரத்துவெளிச்சப் புள்ளிகளான ஊர்கள்.  தமிழகத்தில் மிகச்சிறந்த மலை பிரதேசங்களான (Hill stations) ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு, ஏலகிரி மலைகள் என மனதை மயக்கும் இடங்கள்.

மலைகளில் வனங்களின் பரப்புகளில் மருத்துவகுணம்மிக்க பல்லாயிரம் செடிகள்,  கொடிகள், மரங்கள். சுவாசங்களை உள்ளிழுத்து சுவாசித்து பாருங்கள். உச்சிமுதல் பாதம் வரை அந்த மருத்துவ மரங்களின் காற்றில் உள்ளமும், உடலும் உற்சாகம் கொள்ளும்.

பூமிக்கு மலைகளை முளைகளாக ஆக்கிவைத்தோம் என்ற திருமறை வசனங்களின் பொருள்கள் மலைகளின் உச்சியில் இருந்து பார்த்தால் விளங்கும்.

மலைகளில் பரவி இருக்கும் அடர்ந்த காடுகளும் அதில் வாழும் வகைவகையான மிருகங்களும், மலைப்பிரதேசங்களில் கண்களை குளிரவைக்கிற பூந்தோட்டங்கள்,  அதிசயசெடிகள்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து நிற்கும் மரங்கள். மரங்களில் மறைந்திருக்கும் வளையங்களை வைத்து அவைகளின் வயதை கணக்கிடுகிறார்கள்..!

பயணக் குதூகலங்களை தொடர்ந்துபேசுவோம்..!

இறைவன் நாடினால்..!

கப்ளிசேட்

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal