அபுதாபியில் இருந்து உம்ரா வந்த சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் சாலை விபத்தில் மரணம்! இன்று (15/10/2018) அல்ஹஸாவில் நல்லடக்கம்..

அபுதாபியில் இருந்து தம் மனைவி பிள்ளையோடு ரோடு மார்க்கமாக புனித உம்ரா பயணம் வருகை தந்த சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மக்தூம் பதுருதீன்(வயது-32) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018)அன்று அதிகாலை அல்ஹஸ்ஸா ஹாரத் என்னும் இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவர் அபுதாபி ஈ.டி.ஏ.மெல்கோ கம்பெனியில் பணி புரிந்து வந்துள்ளார்.கடந்த வியாழன் அன்று அபுதாபியில் இருந்து குடும்பத்துடன் உம்ரா புறப்பட்டு வந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலை கடும் பனி மூட்டத்தின் காரணமாக ஓட்டுனர் ரோடு தெரியாமல் நிலை குலைந்து வாகனத்தை மின் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இதில் ஓட்டுனர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்; மூன்று பேர் சிறு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மக்தூம் பதுருதீன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னா உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்து தேவையான உதவிகளை செய்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை தமது வீட்டில் அமர வைத்து விட்டு இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் விரைவு படுத்தினார்.

வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை என்பதால், ஞாயிறு அன்று காலையிலே இந்திய தூதரகத்தின் உதவியோடு சவூதி அரசின் மருத்துவத்துறை மற்றும் காவல்துறையின் அனைத்து ஆவணங்களையும் பெற்று திங்கட்கிழமை அன்று நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி திங்கட்கிழமை(15.10.2918) இன்று மாலை அஸருக்குப்பின் இறந்தவரின் உடல் அல்ஹஸ்ஸா அல்ஹஃபூப் சல்ஹியா அடக்கஸ்தலத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விபத்து செய்தி கேள்விப்பட்டதும் தாமதமின்றி செயல்பட்டு உரிய உதவிகளை செய்து கொடுத்த இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகி ஜின்னாவுக்கும் பிற நிர்வாகிகளுக்கும் இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரசுக்கும் இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தம்மாம் தலைவர் சகோ.பைசல் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி தொகுப்பு:கீழை அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..