Home செய்திகள் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்த ஊரகவளர்ச்சித்துறை புதிய உத்தரவு பேச்சுவார்த்தை வெற்றி! போராட்டம் ஒத்திவைப்பு!..

மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்த ஊரகவளர்ச்சித்துறை புதிய உத்தரவு பேச்சுவார்த்தை வெற்றி! போராட்டம் ஒத்திவைப்பு!..

by ஆசிரியர்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டாயம் வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட பணிகள் வழங்கவும், 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கவும் நூறு நாள் வேலை சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதற்காக 2012 ஆம் ஆண்டு அரசாணை எண்.52 அமலில் உள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதாவது காரணங்களைச் சொல்லி வேலை வழங்க மறுக்கப்படுகின்றன.

பல இடையூறுகளுக்கு மத்தியில் இத்திட்டத்தில் வேலைக்கு வரும் மாற்றுத் திறனாளிகளை, சட்ட விதிகளுக்குப் புறம்பாக, 8 மணி நேரம் பணி செய்ய வற்புறுத்துவது, கடினமான பணிகளை செய்ய வற்புறுத்துவது, முழு ஊதியம் வழங்க மறுப்பது, மாற்றுத்திறனாளிகள் மனது புண்படும்படி அவமானப்படுத்திப் பேசுவது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் அன்றாடம் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் நடைபெறுகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலும், சட்டப்படியாக இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணிகளை உத்தரவாதப்படுத்தக் கோரியும், அக்-9 அன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை சென்னை சைதாப்பேட்டையில் ஊரகவளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3-வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்திருந்தது.

இப்போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகள் அக்-8 திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே என ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படியான 4 மணி நேர வேலை, முழு ஊதியம் வழங்கவும், தவறு செய்யும் அலுவலர்கள் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நூறு நாள் வேலையை உத்தரவாதப்படுத்தும் வகையிலும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளை களையும் வகையிலும் புதிய உத்தரவு சுற்றறிக்கை ஒன்றை ஊரகவளர்ச்சித்துறை மாநில இயக்குனர் அக்-8 மாலை மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்சுற்றறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தியும், அவர்களுக்கென இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பணிகளை விவரித்தும்,

தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர்கள் ஜி.முத்துமீனாள், ஆர்.ராஜஸ்ரீ ஆகியோர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில நிர்வார்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையில் மாநில செயலாளர் டி.வில்சன், மாநில துணைத்தலைவர் பி.பாரதி அண்ணா மாநில துணை செயலாளர்கள் கே.பி.பாபு, எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதை தொடர்ந்து அக்-9 நடைபெறவிருந்து மாநில அளவிலான காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது.

தகவல்:- அபுபக்கர்சித்திக்

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!