இராமநாதபுரம் தாலுகா கூட்டுறவு சங்க தேர்தல் கூச்சல் குழப்பம்..

இராமநாதபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க இயக்குநர்கள் 11 பேரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பரிசீலனை 08.10.18 , அக். 11 ஆம் தேதி தேர்தல், அக்., 13 ஆம் வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. ராமநாதபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. தேர்தல் அலுவலர் சி. மங்களநாதசேதுபதி வேட்பு மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

மனுத்தாக்கல் துவங்கியதும் அதிமுக தஞ்சி.சுரேஷ், மருதுபாண்டியன் சண்முகவேல் உள்ளிட்ட சிலர் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்து கொண்டிருந்தனர். அதிமுகவினர் மதியம் 12 மணி வரையிலும், அதன் பின்னர் அமமுக நிர்வாகிகள் மனுத்தாக்கல் செய்ய போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.15 மணிக்கு அமமுக மாவட்ட செயலர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் அக்கட்சி அமைப்பு செயலாளர் முனியசாமி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், மனுத்தாக்கல் செய்யும் இடத்தில் தேவையின்றி கூடியுள்ள அதிமுகவினரை வெளியேற்றுமாறு போலீசாரிடம் கூறினர்.

அலுவலக வளாகத்தில் அதிமுகவினர் தனியாக இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் அவர்களை பொருட்படுத்தாமல் அமமுகவினர் மனுத்தாக்கல் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனால் போலீசார், அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் அப்புறப்படுத்தியதையடுத்து அமமுகவினர் மனுத்தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் டி.எஸ்.பி., நடராஜன், டி.எஸ்.பி.சுரேஷ்குமார், பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது. தேர்தல் அலுவலர் மங்களநாதசேதுபதி கூறுகையில், இயக்குநர்கள் 11 பேருக்கு அதிமுக தரப்பில் 16 பேரும், அமமுக தரப்பில் 14 பேரும்,திமுக தரப்பில் 2 பேரும் வீதம் மொத்தம் 32 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுத்தாக்கல் செய்வதற்காக 63 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தது என்றார்.

அமமுக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் கூறுகையில் ,திடீரென தேர்தல் அலுவலரை மாற்றம் செய்திருக்கின்றனர். ஆளும் கட்சியினரை முதலில் மனுத்தாக்கல் செய்ய விட்டு அதன் பின்னர், 3 மணி நேரம் வரை எங்களை காக்க வைத்திருந்து அதன் பின்னரே போலீசார் எங்களை மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர். தேர்தல் முறையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..