விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதா??- பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று (05.10.2018) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம், நெடுவாக்கோட்டை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடத்தில் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த பின் பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசை நம்பி நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமார் 1 1/2 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்க்கொண்டனர். கடந்த செப்டம்பர் 15 வாக்கில் அறுவடை துவங்கி தற்போது முடிந்து விட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு குவிண்டால் 1க்கு ரூ 200 வீதம் விலை நிர்ணயம் செய்தது. கடந்த வாரம் மாநில அரசு ரூ 50, ரூ70 என ஊக்கத்தொகையும் உயர்த்தி அக்டோபர் 1 முதல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை நம்பி அறுவடை செய்த நெல்லை15 தினங்களுக்கும் மேலாக கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்து கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர். ஆனால் 2 தினங்களாக பெய்யும் மழையை காரணம் காட்டி கொள்முதல் செய்ய கொள்முதல் பணியாளர்கள் மறுப்பதால் காய்ந்த தரமான நெல் மழையில் நனைவதை பார்த்து பறிதவிக்கிறார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி அவர்களிடத்தில் உடன் நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுங்கள் என அவரது கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் 17% ஈரப்பதம் நெல் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும், தற்போது 22% ஈரப்பதம் உள்ளதால் மத்திய அரசு அனுமதி வழங்கினால் தான் கொள்முதல் செய்ய முடியும் என தட்டிக் கழிக்கிறார். இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

காலத்தில் அனுமதி பெறாமல் தற்போது மத்திய அரசை காரணம் காட்டி விவசாயிகள் வயிற்றிலடிப்பது நியாயமா?

மத்திய அரசிடம் வாய்மொழி உத்திரவை பெற்று கொள்முதல் செய்து விட்டு பின் அனுமதியை முன்தேதியிட்டு பெற்றுக் கொடுத்து முன்னால் முதல்வர் அம்மா ஜெயலலிதா விவசாயிகளை பாதுகாத்து வந்தார்.

அதனை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மேலாண் இயக்குநர் சுதாதேவி தன் முட்டை ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக விவசாயிகளை வஞ்சிக்கிறாரோ? என எண்ணத் தோன்றுகிறது.

வரும் 7ம் தேதி கடும் மழைப்பொழிவை எதிர் பார்த்து முன்னெச்சரிக்கை வடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொள்முதல் நிலைய வாயில்களில் கொட்டிக் கிடக்கும் நெல்லை விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் உடன் தலையிட்டு நிபந்தனையின்றி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்திட அவசரக்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாத்திட வேண்டுகிறேன் என்றார்.

திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரான்குளம் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் பி.கே.கோவிந்தராஜ், துணை செயலாளர் நெடுவை சங்கர், ஆசை உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தகவல்:- அபுபக்கர்சித்திக்

செய்தி தொகுப்பு அ.சா.அலாவுதீன்.கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )

புனித ரமலான் வாழ்த்துக்கள்..