அதிமுக சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது…

இலங்கைத் தமிழர் மீது பற்று இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி இல்லை, என அறிவிக்க வேண்டும் என அதிமுக அமைப்புச் செயலாளர் ராஜ கண்ணப்பன் பேசினார்.

திமுக, காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர், முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், தலைமை கழக பேச்சாளர் சிட்கோ சீனு, மாவட்ட அவைத்தலைவர் முருகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆனி முத்து, தர்மர், ஜெ.. பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலர் தர்வேஸ், ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் தங்கமரைக்காயர், இராமநாதபுரம் அசோக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

அதை தொடர்ந்து வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பேசியதாவது,”பஞ்சாப் படுகொலை சம்பவத்திற்கு 94 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் வெள்ளைக்காரர்கள் படுகொலை செய்தது வருத்தம் அளிக்கிறது. இதற்கு வெட்கப்படுகிறேன் என 2013 இல் இந்தியா வந்தபோது தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலை நடந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது .

ஒன்று பதவியை தக்க வைப்பது, மற்றொன்று இலங்கையில் தமிழர் உயிரை பாதுகாப்பது. இதில் கருணாநிதி தமிழரை விட்டுவிட்டு, பதவியை காப்பாற்றிக் கொண்டார். அதுதான் சோனியாவுக்கும், கருணாநிதிக்கும் நல் உறவை ஏற்படுத்தியது. கருணாநிதி நினைத்திருந்தால் போரை நிறுத்தி இருக்கலாம். போர்க்குற்றவாளி திமுக என்று அன்றே சட்டசபையில் ஜெயலலிதா கூறினார். இந்திய ராணுவ வீரர்கள் மாற்று உடையில், அதாவது எங்களது உடையில் வந்து தமிழர்களை சுட்டு கொன்றனர் என ராஜபக்ஷே தற்போது தெரிவித்துள்ளார். தமிழர் என அடையாளப்படுத்துவது மொழி. தமிழருக்கு துரோகம் செய்த திமுகவினருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்” என அவர் பேசினார்.

பின்னர் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, “ராணுவ அமைச்சர் நிர்மலா அதிமுகவின் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் தலைவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை பார்க்காமல் புறக்கணித்தது சரியல்ல. இரு நூறு ஓட்டு கூட சொந்தமாக வாங்க முடியாத நிர்மலா சீத்தாராமன் செயல் வருத்தமானது. அதிமுக மகத்தான இயக்கம். தமிழகத்தில் இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி எதுவும் செய்யவில்லை. காங்கிரசுடன் திமுக துணை போனதை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். ஈழத்தமிழர் மீது பற்று இருந்தால் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் உடன் கூட்டணிஇல்லை என அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் இரட்டை வேடம் போடுகிறார் .அதிமுக ஆட்சி எளிமையானது. திமுகவில் வாரிசுகள் தான் பதவிக்கு வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோர் கட்சி நடத்த முடியுமா? முதலில் பூத் கமிட்டி அமையுங்கள் பார்ப்போம். சசிகலா, தினகரன் அதிமுகவில் இல்லாததால் ஆதிதிராவிட மக்கள் தற்போது நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்” என  அவர் பேசினார். இறுதியாக கூட்டத்தில் நகர செயலாளர் அங்குசாமி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image