இராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா…  

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் யாதவர் மஹாலில் இன்று (14.09.2018)  சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.  

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசியதாவது,”:தமிழ்நாடு அரசு கருவுற்ற தாய்மார்களின் நலனுக்காகவும், பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  அந்த வகையில், கருவுற்ற தாய்மார்களின் மனம் மகிழ்ந்திடும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. இன்றைய தினத்தில் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு விழாக்களில் 1,079 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர்.

 கருவுற்ற தாய்மார்கள் மனஉளைச்சல் இல்லாமல் சந்தோசமான மனநிலையில் இருந்திட வேண்டும்.  சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.  புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். அதேபோல கர்ப்ப காலத்தில் முறையான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது மத்திய அரசு 01.09.2018 முதல் 30.09.2018 வரையிலான நாட்களில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவாக (Poshan Abhiyan) கடைப்பிடித்திட அறிவுறுத்தியுள்ளது.  இதன்மூலம் பெண்களுக்கு கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் வழங்குதல், தடுப்பூசி போடுதல், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, பெண் கல்வி, சுத்தம், சுகாதாரம், இரத்தசோகை தடுப்பு, குழந்தைகளின் உயரத்திற்கேற்ற வளர்ச்சி என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ் பேசினார்.

இவ்விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.  மேலும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.சி.குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவர்கள் மரு.சுந்தரி, மரு.ஷர்மிளா உட்பட அரசு அலுவலர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..