இராமேஸ்வரம் – சென்னை இடையே பகல் ரயில் உட்பட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி அன்வர்ராஜா எம்.பி கோரிக்கை மனு..

மதுரையில் ரயில்வே பொது மேலாளர் குல் செரஸ்தா தலைமையில் தமிழகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை மதுரையில் 12. 9.2018ல் நடந்தது.

இதில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர் ராஜா ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அக்கோரிக்கை மனுவில்,  இராமேஸ்வரம் – மதுரை, மதுரை – இராமேஸ்வரம் மார்க்கத்தில் தினமும் 3 முறை மட்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இரு மார்க்கத்திலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். இதற்கு ஏதுவாக இந்த மார்க்கத்தில் இரட்டை பாதை ஏற்படுத்த வேண்டும். சாத்தியக்கூறுகள் தொடர்பான சர்வே முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ள காரைக்குடி – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலை வழி ரயில் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். உச்சிப்புளி ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் – சென்னை போர்ட் மெயில் எக்ஸ்பிரல்(16852), சென்னை – ராமேஸ்வரம் போர்ட் மெயில் (I6851), ராமேஸ்வரம் – சென்னை சேது எக்ஸ்பிரஸ் (22662), சென்னை – ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் (22661) ரயில்களில் உள்ள அனைத்து ஏசி வகுப்புகளிலும் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்க வேண்டும். முன்னாள் ஜனாபதி மறைந்த ஏ பி ஜெ அப்துல் கலாம் நினைவிடம் காண அதிகரித்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 30 ஆண்டுகளுக்கு முன் அப்புறப்படுத்திய தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மதுரை – ராமேஸ்வரம் வழித்தடங்களில் உள்ள கிராசிங் வசதி ரயில்வே ஸ்டேஷன்களில் உயர் வகுப்பு பயணிகள் ஓய்வறை அமைக்க வேண்டும். வாரம் ஒரு முறை இயக்கப்படும் ராமேஸ்வரம் – கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும். மதுரை – ராமேஸ்வரம் இடையே உள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயில்களின் கடைசி பெட்டி நிற்கும் இடம் வரை மேற்கூரை அமைக்க வேண்டும். ராமேஸ்வரம் – சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர் நலன் கருதி மதுரை – ராமேஸ்வரம் இடையே இயங்கிய பள்ளி நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர விரைவு ரயிலை இராமநாதபுரம், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் – எர்ணாகுளம், ராமேஸ்வரம் – மங்களூர் இடையே புதிய ரயில்கள் இயக்க வேண்டும், இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் அதிக ரயில்கள் நிறுத்தவும், ரயில் பெட்டிகளை பராமரிப்பு வசதிகளுக்காகவும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனை ஜங்சனாக தரம் உயர்த்த வேண்டும். பாம்பன் ரயில் மேம்பாலம் அருகே மற்றொரு ரயில் மேம்பாலம் ஏற்படுத்த வேண்டும். ரூ.380 கோடி மதிப்பீட்டில் இராமேஸ்வரம் – மதுரை ரயில் வழித்தடத்தை மின் மயமாக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் டெமு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளார்.


இக்கோரிக்கைகளை உடனே பரிசீலித்து துரித நடவடிக்கை எடுக்க ரயில்வே உயரதிகாரிகளுக்கு பொது மேலாளர் குல் செரஸ்தா அறிவுறுத்தினார். இக் கூட்டத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீலு இட்டியாரா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி வீராசாமி, முதன்மை தலைமை இயக்க பொறியாளர் அனந்தராமன் மற்றும் மதுரை, திருச்சி கோட்ட ரயில்வே முதன்மை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..