தேவிபட்டினம் நவபாஷான கோயிலில் நீதிபதி ஆய்வு…

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் நவபாஷான கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டணம் வசூல் செய்யப்படுவதாக நீதிபதியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷான கோயில் அமைந்துள்ளது . இராமபிரான் இலங்கைக்கு, சீதையை மீட்கச் செல்லும் முன் தேவிபட்டினம் கடலில் 9 கற்கள் அமைத்து அதனை நவ கிரகங்களாக வழிபட்டதாக ஐதீகம் .இதனடிப்படையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு முக்கிய தலமாக விளங்குவதால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பரிகார பூஜை செய்ய வரும் பக்தர்களிடம் ஜதீகம் தொடர்பான ஆசை வார்த்தை கூறி கட்டண கொள்ளையில் ஈடுபடுவதற்கென கும்பல் அங்கு செயல்படுகிறது.
இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை நுழைவு வாயிலில் வழி மறிக்கும் ஒரு கும்பல் குறைந்த கட்டணத்தில் பரிகாரம் செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று நிறைய பரிகாரங்கள் செய்ய வேண்டும் என அச்சுறுத்தி பக்தர்களிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தனர்.


உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நவபாஷான கோயிலுக்கு ஆய்வுக்கு  சென்ற இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழியை பார்த்ததும் புரோக்கர்கள் ஓட்டம் பிடித்தனர் .சங்கல்ப மண்டபம் பகுதியில் அனுமதியற்ற முறையில் பரிகாரம் செய்ய பொருட்களுடன் இருந்த புரோகிதர்கள் மற்றும் பூஜாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். நீதிமன்ற வழிகாட்டுதல்படி பரிகாரம் மற்றும் பூஜை கட்டணம் தொடர்பாக. ஒலி விளம்பரம் மற்றும் பதாகைகள வைக்கப்பட்டிருந்த போதிலும் உரிய அனுமதியின்றி இங்கு எவ்வாறு பரிகாரம் செய்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். கோவிலுக்கு வந்த சில பக்தர்களிடம் கட்டண வசூல் குறித்து விசாரித்தபோது பரிகாரம் செய்வதாக அழைத்து சென்று அவர்களிடம் சாதாரண பரிகாரமா? சிறப்பு பரிகாரமா என ரகம் பிரித்து சாதாரண பரிகார பூஜைக்கு 500 ரூபாய் கட்டணமும் சிறப்பு பரிகார பூஜைக்கு 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாய் வரை வசூல் செய்வதாகவும், அதில் கோபூஜை பரிகார பொருட்கள் என தனித்தனியே பட்டியவிட்டு பணத்தை கறந்து விடுவதாகவும் நீதிபதியிடம் பக்தர்கள் வேதனையை கொட்டி தீர்த்தனர்.இதுகுறித்து கோவில் நிர்வாக ஊழியர்களிடம் கேட்டபோது ஏற்கனவே இதுபோல ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாகவே சில புரோகிதர்கள் முன்பணம் பெற்றுக்கொண்ட பின்னரே கடலுக்குள் குளிக்க அனுப்புவதாக கூறி புகார் அளித்த புத்தகத்தை காண்பித்தனர். அடுக்கடுக்கான புகார்களை பார்த்து நீதிபதி கயல்விழி அதிர்ந்து போனார். புகார்கள் தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். இராமநாதபுரம் தேவஸ்தானம் சமஸ்தானம் திவான் இப்போது தான் பணி அமர்த்தபட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் சரி செய்யப்படுமென கூறினர்.

பின்னர் அங்கு கோவில் பக்தர்களுக்கு என அமைக்கப்பட்டிருந்த கழிவறையை பார்வையிடச் சென்ற நீதிபதி துர் நாற்றம் தாங்கால் மூக்கை பிடித்துக்கொண்டு கோபத்துடன் வெளியே வந்தார். பெண்கள் கழிவறையை முறையாக பராமரிக்காமல் வைத்திருப்பது குறித்து சம்பந்தப்பட்ட பராமரிப்பாளரை கடுமையாக கடிந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் நீதிபதி கயல்விழி கூறுகையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி .இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களில் ஆய்வு செய்து வருவதாகவும் தேவிபட்டினம் நவபாஷான கோவிலில் நிறை குறைபாடுகள் மற்றும் அர்ச்சகராக அல்லாதோர் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக அறிக்கை அளிக்கப்படும் என்று கூறினார். இராமநாதபுரம் சார்பு நீதிபதி ராமலிங்கம், திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image