இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் மாதம் 28,29,30 தேதிகளில் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாக்களில் வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையிலும் இராமநாதபுரம் எஸ்.பி.ஓம் பிரகாஷ் மீனா, 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவுக்கு பரிந்துரைத்தார். இதனடிப்படையில் செப்.9-ந் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குரு பூஜை  நிகழ்ச்சிகளின் போது நினைவிடத்துக்கு உட்பட்ட ஒரு கிலோ மீட்டர் பகுதியில் மட்டுமே மாவட்ட நிர்வா் முன் அனுமதியுடன் ஜோதி எடுத்து வர அனுமதிக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து ஜோதி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதோ ,அனுமதியின்றி பேரணி, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவோ கூடாது. மாவட்ட நிர்வாக முன் அனுமதி பெற்று கூட்டங்கள் போன்றவை நடத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் வி ர ராகவ ராவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.