காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை . அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) செப்.2 காலை சமுதாய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. செப்டம்பர்  3 அன்று காலை அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணியில் இருந்து மஞ்சள் நீராட்டு, வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர் கே சாமி பள்ளி தாளாளர் விஜயன் தலைமை வகித்தார். யாதவர் மகா சபை தலைவர் வேலு மாணிக்கம் மனோகரன் துவக்கி வைத்தார்.மாலை 5 மணியளவில் உறியடி உற்சவம் நடந்தது. கோகுல கண்ணன் உறி இழுக்க விவேக் ஆதித்தன் உறியடித்தார். இரவு 7 மணி அளவில் கண்ணன் வீதியுலா (தேரோட்டம் ) நடந்தது. செப்., 4 காலை 11 மணிக்கு வட மாடு எருது கட்டு உற்சவம் துவங்கியது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை , திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 12 காளைகள் கலந்து கொண்டன. ஒரு குழுவிற்கு தலா 9 பேர் வீதம் 100க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றியை ருசித்த சீறிய காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் சீண்டிய காளையர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

காஞ்சிரங்குடி விவேக் ஆதித்தன், மதுரை மாவட்டம் தேவர் பெருமாள் பட்டு மந்த கருப்பசாமி, காஞ்சிரங்குடி வினோத் ஆதித்தன் ஆகியோருக்கு சொந்தமான காளைகள் முதல் 3 பரிசுகளை வென்றன. சிவகங்கை மாவட்டம் பனங்குடி பெரிய நாயகி அம்மன், அரசனூர் நொண்டி கருப்பசாமி குழுவினர் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான பரிசை தட்டிச் சென்றனர். பரிசளிப்பு விழாவிற்கு  தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத்தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வடமாடு நலச்சங்க தலைவர் அந்தோணிமுத்து, கவுரவத் தலைவர் செல்வம், தமிழ்நாடு ஏறு தழுவுதல் பேரவை மாநில தலைவர் ஜோதிமுருகன், தமிழ்நாடு ஜல்லிக் கட்டு பேரவை மாவட்ட தலைவர்கள் பிரேம் (மதுரை), தளபதி காத்தான் (திருச்சி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் மற்றும் மதுரை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு எருது கட்டு பேரவை மாவட்ட தலைவரும், ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட பொறுப்பாளருமான காஞ்சிரங்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் ஆதித்தன் விழாவை ஒருங்கிணைத்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..